ஸ்டீல் குழாய்களை கழற்றி சரக்கு அடித்த நபர் கைது!

ஸ்டீல் குழாய்களை கழற்றி சரக்கு அடித்த நபர் கைது!

ஜி.குலசேகரன்,

  வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளை பார்ப்பது போல் சென்று நூதன  முறையில் 50 ஆயிரம் மதிப்பிலான ஸ்டீல் பைப்புகள் திருடிச் சென்ற இளைஞர் கைது மருத்துவமனை ஊழியர்கள் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

   திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 6 தளங்கள் கொண்ட புதிய  அரசு மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது.

இந்த நிலையில் அந்த மருத்துவமனை கட்டிடத்தில் உள்ள  கழிவறைகளில்  ஸ்டீல் குழாய்கள் மற்றும் பைப்புகள்  புதிதாக பொருத்தப்பட்டுள்ளது.  இந்த  ஸ்டீல் பைப்புகள் மற்றும் குழாய்கள் அவ்வபோது  காணாமல் போவதாக கூறப்படுகிறது.

  இரண்டு நாட்களுக்கு முன் மருத்துவமனையைஒரு நபர் நோட்டமிட்டு சுற்றி திரிந்துள்ளார். பின்னர் கழிவறையில் குழாய்கள் கழற்ற முயன்றுள்ளார்.

  அதை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் அந்த நபரை பிடித்து விசாரித்துள்ளனர்.அப்போது அந்த நபர் தான் நகராட்சி ஒப்பந்த  ஊழியர் எனவும் இங்குள்ள நோயாளி ஒருவரை பார்க்க வந்ததாக கூறியுள்ளார். அதன் பின்னர் அவருடைய இரு சக்கர வாகனத்தில் பார்த்த போது மருத்துவமனையில் கழற்றப்பட்ட ஸ்டீல் குழாய்கள் இருந்தது தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் நகர  காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு அந்த நபரை  காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.பின்னர் அந்த நபரை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்த போது  வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பரணிகுமார் என்பதும், கட்டிட  தொழிலாளி எனவும் இதற்கு முன்னதாக நகராட்சி தற்காலிக பணியாளராக வேலை செய்து வந்ததாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

   மேலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையான பரணிகுமார் நாள்தோறும் அரசு மருத்துவமனை மற்றும் பல்வேறு இடங்களில் சென்று இது போன்ற  குடிநீர் பைப் மற்றும் ஸ்டில் குழாய்களை கழற்றிச் சென்று அதனை விற்று மது அருந்தி வந்தது தெரிய வந்தது.

  இது வரை  அரசு மருத்துவமனையில் ரூபாய் 50 ஆயிரம் மதிப்பிலான ஸ்டீல் பைப்புகள் மற்றும் குழாய்கள் காணாமல் போனதாக மருத்துவமனை நிர்வாகத்தில் கூறப்படுகிறது.