கைத்தறி துறை கூடுதல் இயக்குனர் லஞ்சம் கேட்கிறாராமே? ஆகவேதான் பிரச்சனையா?

 கைத்தறி துறை கூடுதல் இயக்குனர் லஞ்சம் கேட்கிறாராமே? ஆகவேதான் பிரச்சனையா?

சுரேஷ்,

தமிழ்நாடு தொடக்க கைத்தறி விசைத்தறி நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் தங்கவேல் என்பவர் தமிழக முதல் அமைச்சரிடம் மனு ஒன்றை அளித்திருக்கிறார். இந்நிலையில் நெசவாளர்கள் போராட்டமும் நடத்தியுள்ளனர்.

  முதலில் அந்த புகாரில் கூறப்பட்டிருக்கும் விஷயங்களைப் பார்ப்போம்.

 தமிழக அரசின் கூட்டுறவு கூட்டுறவு நூற்பாலைகளில் உற்பத்தி செய்து வழங்கிய நூல்கள் மூலம் விலையில்லா வேட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டு அவை கூட்டுறவு சங்களுக்கு வழங்கப்பட்டது.

  கைத்தறி மற்றும் விசைத்தறி கூட்டுறவுச் சங்கங்கள், சங்க உறுப்பினர்கள் மூலம் நெசவு செய்து தமிழக அரசுக்கு வேட்டிகள் அனுப்பபட்டது.

 அதில் பதிமூன்று லட்சம் (13,00,000) வேட்டிகள் அரசு நூற்பாலைகளில் உற்பத்தி செய்த வார்ப்பு நூலில் ரெடியானது ஆகும்.

  இந்நிலையில் அவை பாலிஸ்டர் காட்டன் தர வித்தியாசம் உள்ளதாக குறை சொல்லி, கொள்முதல் செய்யாமல் கிடங்கில் ஒரு வருடமாக இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

  மேற்படி பதிமூன்று லட்சம் (13,00,000) வேட்டிகளுக்கு நெசவு கூலி மற்றும் சங்கங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை சுமார் 80 கோடிக்கும் மேல் பிடித்தம் செய்துள்ளார்கள்.

  இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் பகுதியில் செயல்பட்டு வந்த சங்கங்கள் தொடர்ந்து செயல்பட இயலாமலும் நெசவாளர்களுக்கு நெசவு கூலி வழங்க இயலவில்லை. எனவே முதல்வர் நெசவாளர்களையும் நெசவு தொழிலையும் காக்கும் பொருட்டு இருப்பில் உள்ள வேட்டிகளை கொள்முதல் செய்து நெசவாளர் சங்கங்களுக்கு நெசவு கூலி மற்றும் நிலுவை தொகை உடன் வழங்க ஆணையிடுமாறு கூட்டமைப்பின் சார்பில் பணிவுடன் வேண்டுகிறோம் என்று அந்த மனுவில் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

  இந்த மனுவை முதலமைச்சரிடம் நேரில் அளித்த போது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறூதியளித்திருக்கிறார்.

  இந்நிலையில், சுமார் 13-லட்சம் வேட்டியை அரசு கொள்முதல் செய்ய வலியுறுத்தி நெசவாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இது குறித்து விசாரித்த போது, தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்காக குடும்ப அட்டை உறுப்பினர்களுக்கு இலவச வேட்டி,சேலை வழங்கி வருகிறது.

 அந்த வகையில் கடந்தாண்டு ஒரு கோடியே 77லட்சம் வேட்டி சேலை கொள்முதல் செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

  இதையடுத்து அரசின் சார்பில் கொள்முதல் தர பரிசோதனை போது 13லட்சம் வேட்டிகள் பாலிஸ்டர் கார்டனை விட கூடுதலாக இருப்பதால் அரசு கொள்முதல் செய்யவில்லை.

 இதனால் நெசவாளர்கள் வேட்டியை மீண்டும் தர பரிசோதனை செய்து கொள்முதல் செய்ய வேண்டும் என நெசவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 இந்நிலையில் ஈரோட்டில் தமிழ்நாடு தொடக்க கைத்தறி விசைத்தறி நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நெசவாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இதில் ஈரோடு, திருச்செங்கோடு, நாமக்கல்,திருப்பூர் பகுதியை சேர்ந்த 65 சங்கங்களில் வேட்டிகள் கொள்முதல் செய்யாமல் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தான் நூல்களை கொள்முதல் செய்து கூட்டுறவு சங்கங்களுக்கு நூல் வழங்கி வரும் நிலையில் நெசவாளர்கள் வேட்டி பாலிஸ்டர் இருப்பதற்கு பொறுப்பாக முடியும் என போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்பினர்.

அதே போன்று அரசு கொள்முதல் செய்யாமல் இருக்கும் 13லட்சம் வேட்டிகளால் 20 கோடி ரூபாய் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக நெசவாளர்கள் புகார் கூறுகின்றனர்.

இதனால் நெசவாளர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்க கொள்முதல் செய்யாமல் இருக்கும் 13லட்சம் வேட்டியை மீண்டும் தர பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.

  இது ஒருபுறம் இருக்க, தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் கூடுதல் இயக்குனர் தமிழரசி சங்கங்களிடம் லஞ்சப்பணம் கேட்டு கெடுவிதித்தாராம். அதற்கு நெசவாளர் சங்கங்கள் ஒப்புக் கொள்ளாததால் இன்னமும் அவை கொகள்முதல் செய்யப்படவில்லை என்கிறார்கள்.

ஓ...அதான் சங்கதியா?

இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு உண்மை நிலையை அறிய முற்பட்டோம் ஆனால் கிடைக்கவில்லை. பின்னர் விளக்கம் அளித்தால் அதை பரிசீலித்து வெளியிடப்படும்.