மேக்கப்பா.......மகளிர் உரிமைத் தொகையை கொச்சைப்படுத்திய திமுக வேட்பாளர்!சிட்டிங் எம்.பி.- க்களை வறுத்தெடுக்கும் வாக்காளர்கள்!
ம.பா.கெஜராஜ்,
தமிழகத்தில் தேனி தொகுதியைத் தவிர்த்து மற்ற 38 நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக வைச் சேர்ந்தவர்களே எம்.பி.களாக உள்ளனர். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வென்று சென்ற அவர்களில் சிலர் தமக்கு வாக்களித்தவர்களை கடந்த ஐந்து ஆண்களாக திரும்பிப் பார்கவே இல்லை. தொகுதியையே மறந்துவிட்டனர்.
அப்படிப்பட்ட எம்பிகள் பலரின் பவர் பாலிடிக்சின் காரணமாக தலைமை மீண்டும் அவர்களுக்கு அந்தந்த தொகுதியிலேயே போட்டியிடும் வாய்ப்பை அளித்திருக்கிறது.
அந்த வகையில் வட சென்னை மக்களவை தொகுதி வேட்பாளராக சிட்டிங் எம்பி கலாநிதி வீராசாமிக்கு மீண்டும் அதே தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
அவர் நேற்று முன்தினம் திருவொற்றியூரில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக கொளத்தூர் தொகுதியில் உள்ள கவுதமபுரத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோருடன் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது மேயர் பிரியா, வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது அங்கிருந்த பெண்கள் திமுகவினரைப் பார்த்து, எதுக்கு வந்தீங்க? நிவாரணம் பெறத் தகுதி இல்லாத எங்களின் வாக்குகள் உங்களுக்கு எதற்கு? எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் 840 குடும்பங்கள் வசிக்கின்றன. கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தின் போது வெளியே செல்ல முடியாமல் அனைவரும் பாதிக்கப்பட்டோம். அப்போது குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே டோக்கன் வழங்கி கட்சி சார்பில் நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகளை கொடுத்தாங்க.
எங்களுக்கு ஏன் வழங்கவில்லை என கட்சிக்காரர்களிடம் கேட்டால், 'கட்சிக் கொடி பிடித்தாயா, கோஷம் போட்டாயா, ஊர்வலம் வந்தாயா, உங்களுக்கு ஏன் நிவாரணம் கொடுக்க வேண்டும் என்று நக்கலாக கேட்டார்கள். கட்சி நிவாரணம் பெறக்கூட தகுதி இல்லாத எங்களிடம் ஏன் வாக்கு கேட்டு வந்தீர்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம். நாங்கள் கஷ்டப்படும் போதெல்லாம் கண்டுகொள்ளவில்லை. இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு இவர்கள் வாக்கு சேகரிக்க வருகின்றனர் என்று வாக்கு சேகரிக்க வந்தவர்களைப் பார்த்து கேள்வி எழுப்பி கூச்சல் போட்டனர்.
இதனால் வேட்பாளர் உள்ளிட்டோர் இறுகிய முகத்துடன் அங்கிருந்து வெளியேறினார்கள்.

தென் சென்னை வேட்பாளரை திருப்பி அனுப்பிய வாக்காளர்கள்.
தென் சென்னை தொகுதியில் மீண்டும் சீட்டு பெற்றுள்ளார் தமிழச்சி தங்கப்பாண்டியன். இந்நிலையில் அவர் திருவல்லிக்கேணியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பிரச்சார வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு, எங்க வந்தீங்க? அப்படியே திரும்பி போயிடுங்க. இங்க 1500 ஓட்டு இருக்குது. ஒரு ஓட்டு வித்தியாசத்தில் கூட ஜெயித்தவங்க இருக்குறாங்க.
போன தடவை ஓட்டு வாங்கி ஜெயிச்சு போனதோடு சரி. இப்ப திரும்பவும் ஓட்டு கேட்டு வர்ரீங்க. போம்மா இங்கிருந்து என அவர்களை விரட்டினார்கள்.
வேலூர் தொகுதி வேட்பாளரின் நக்கல்,

அதே போல் வேலூர் தொகுதியில் போட்டியிடும் சிட்டிங் எம்.பி. கதிர் ஆனந்த் மீதும் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு தடவை கூட தொகுதி பக்கமே அவர் வந்ததில்லை, குறிப்பிடும்படியான பணிகள் எதையும் செய்யவில்லை என பல பகுதிகளில் இருந்து குரலெழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இரண்டு நாட்களுக்கு முன் கதிர் ஆனந்த் செய்தியாளர்களை சந்தித்த போது, பஸ் ஸ்டாப் கட்டி கொடுத்தேன், ஹைமாஸ் விளக்கு போட்டு கொடுத்தேன் என்று சொல்லிக்கொண்டே போனார், அப்போது குறுக்கிட்ட ஒரு நிருபர் சார், இதையெல்லாம் சாதாரண ஊராட்சி மன்ற தலைவரே செய்யலாமே? நீங்க... என்ன பணிகளை செய்தீர்கள் என்று கேட்டார். அந்த கேள்விக்கு எம்.பி.தரப்பிலிருந்து நோ ரெஸ்பான்ஸ்.
இந்த லட்சணத்தில் கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் கதிர் ஆனந்த்¢ வாக்கு சேகரித்த போது, அங்கு கூடியிருந்த பெண்களைப் பார்த்து, என்னன்னு தெரியலே காலையில் இருந்து பார்க்குறேன், எல்லோரும் பளபளன்னு இருக்கீங்க! "ஃபேரன் லவ்லி" பான்ட்ஸ் பவுடர், சிங்கார் குங்குமம் என பளபளன்னு இருக்குது! என்னான்னு தெரியலை, என்னா காரனம்? ஆயிரம் ரூபாய் வந்துச்சா... ஆயிரம் ரூபாய் வந்துச்சா? அதான்... என்று மாதா மாதம் அரசு கொடுக்கும் மகளிர் உரிமைத் தொகையை மையப்படுத்தி நக்கலடித்தார்.
இதற்கு சிலர் வருத்தப்பட்டு பேசிய சிலர் கூறுகையில், மகளிர் உரிமைத் தொகை கிடைப்பதால் மருந்து வாங்குகிறோம், நல்ல சாப்பாடு சாப்பிடுகிறோம், பால் வாங்குகிறோம் என்று பெண்கள் (பயணாளிகள்) சொல்வதாக திமுக அரசு விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் கதிர் ஆனந்த் பெண்களைப் பார்த்து உங்களுக்கு வழங்கப்படும் உதவி பணத்தில் மேக்கப் போட்டுக்கொண்டு வந்திருக்கீங்களா என்று கேட்பது அநாகரீகம் என்றனர்.
விளங்கிடும்.....!

admin
