பாலாற்றை பாதுகாக்க 120 கி.மீ. சைக்கிளில் சென்று போராடியவன் நான்! திமுக அண்ட புளுகு புளுகுகிறது! மருத்துவர் ச.ராமதாசு பேச்சு!
ஜி.கே.சேகரன்,
பாலாற்றை பாதுகாக்க பா.ம.க செய்த போராட்டங்கள் ஏராளம், திமுக தேர்தலுக்காக பல பொய்களை வாக்குறுதிகளாக அளித்தது, ஆனால் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை - பாமக வேட்பாளர் பாலுவை ஆதரித்து பொது கூட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாசு பேச்சு.
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பேருந்து நிலையம் மற்றும் முத்துக்கடை பேருந்து நிலையத்திலும் பாட்டாளி மக்கள் கட்சியின் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வழக்குரைஞர் பாலுவை ஆதரித்து பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர்கள் அரங்க.வேலு.,என்.டி.சண்முகம்,மாவட்ட செயலாளர்கள் சரவணன்,இளவழகன்,அமைப்பு செயலாளர் அ.,ம.கிருஷ்ணன்,சக்கரவர்த்தி புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம்,அமமுக மாநில அவைத்தலைவர் கோபால், உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாசு பேசுகையில், வேலூர் மாவட்டத்தில் பாமக செய்த போராட்டங்கள் ஏராளம். அதிலும் குறிப்பாக இந்தியாவில் 52 மாவட்டங்கள் கருப்பு மாவட்டங்கள் ஆகும். அதில் ராணிப்பேட்டை மாவட்டமும் ஒன்று. இங்கு தோல் தொழிற்சாலை கழிவு நீரால் மணல் கெட்டுவிட்டது இதை பூமாதேவி பொறுத்துக் கொள்வாளா.
பாலாறு பாழ்படுத்தப்படுவதை தடுக்க கோரி வாணியம்பாடி முதல் வாலாஜா வரை சைக்கிளில் பயணித்து போராடியவன் நான். ஒரு நாளைக்கு 40 கிலோ மீட்டர் என 120 கிலோமீட்டர் பயணித்து போராட்டம் நடத்தினேன் பாலாற்றை காப்பதற்காக எத்தனையோ போராட்டங்களை நடத்தியது நாம் தான்.
எனக்கு வலப்பக்கமும், இடப்பக்கமும் இரண்டு எம்பிக்கள் அமர்ந்திருக்கிறார்கள். இவர்கள் நாடாளுமன்றம் சென்று இதை எல்லாம் காப்பாற்றுவார்கள்.
திமுக கொடுத்த வாக்குறுதிகளில் முக்கியமான ஐந்து நிறைவேற்றவே இல்லை.
*உங்க வீட்டு நகைகளை எடுத்து வந்து அடமானம் வையுங்கள் தேர்தலுக்குப் பிறகு அந்த அடமான கடனை ரத்து செய்கிறோம் என்று சொன்னார்கள் செய்யவே இல்லை,
*கல்வி கடன் கொடுப்பதாக சொன்னார்கள் அதையும் செய்யவில்லை.
*ஊரக வேலை வாய்ப்பு 100 நாள் என்பதை 150 நாளாக உயர்த்துவோம் என்றார்கள் அதையும் செய்யவில்லை.
*ஐந்தரை லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவோம் என்றார்கள் அதுவும் கொடுக்கவில்லை.
*மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்றார்கள்? இது வேடிக்கையாக உள்ளது! இங்கு நிற்கிற வேட்பாளரே சாராய அதிபர். அப்பறம் எப்படி இவங்க மதுவிலக்கு கொண்டு வருவார்கள். திமுக கொடுத்த வாக்குறுதிகள் எல்லாமே புளுகு தான். அண்ட புளுகு ஆகச புளுகா சொன்னார்கள். அதுவும் பகவான் ஜமகாளத்தில் வடிகட்டிய புழுகு.
அதே போல் காகிதப்பூ மணக்காது காங்கிரஸ் சோசியலிசம் இனிக்காது. திமுக வசனங்களை தான் பேசுவார்கள் மக்கள் நீங்கள் திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டுமென அவர் பேசினார்.

admin
