வெடி பொருட்கள் பதுக்கல்..விபத்து...முதல்வர் இரங்கல்!

வெடி பொருட்கள் பதுக்கல்..விபத்து...முதல்வர் இரங்கல்!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,

  தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இல்லீகல் கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. அவர்கள் வரையறுக்கப்பட்டதை காட்டில்கும் அதிக டெசிபில் கொண்ட வெடிகளை கட்டுபாடின்றி பயன்படுத்தி வருகிறார்கள். இதனை மாவட்ட வருவாய் அலுவலர்களும், காவல் துறையினரும் கட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என்கிற கோரிக்கைகள் இருக்கின்ற பொழுது அதையெல்லாம் எவரும் காதில் போட்டுக்கொள்வதேயில்லை.

  இதனால் அவ்வப்பொழுது விபத்துகள் ஏற்படுகிறது. உயிர் சேதமும் தவிர்க்கமுடியாததாக ஆகிவிடுகிறது. இந்நிலையில் தான் விருது நகர் மாவட்டத்தில் கல்குமாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளிகள் பலியாகியிருக்கிறார்கள்.

முதலமைச்சர் இரங்கல்

 விருதுநகர் மாவட்ட தனியார் வெடிபொருள் சேமிப்புக் கிட்டங்கியில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்துதமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

          விருதுநகர் மாவட்டம் டி.கடம்பன்குளத்தில் இயங்கி வந்த தனியார் வெடிபொருள் சேமிப்புக் கிட்டங்கியில் ஏற்பட்ட எதிர்பாராத வெடிவிபத்தில், அங்குப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

 ந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டவுடன் அரசின் நிவாரண உதவி விரைந்து வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

விபத்தின் விவரம்.

   விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கீழ உப்பிலிக்குண்டு கிராமத்தில் கல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்படுவது வழக்கம். மேலும், இந்த குவாரியில் வெடிமருந்து இருப்பில் வைக்க குடோன் உள்ளது. இந்த குடோனில் இருந்து சரக்கு வேனில் வெடிமருந்து, குவாரிகளுக்கு ஏற்றி செல்லப்படும். குடோனில் சட்டவிரோதமாக அதிகளவில் வெடிபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

 நேற்று காலை 8 மணியளவில் இரண்டு சிறிய சரக்கு வாகனங்களில் வெடிமருந்து ஏற்றும் பணியில் காரியாபட்டி அருகே டி.புதுப்பட்டியை சேர்ந்த கந்தசாமி, தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த துரை, குருசாமி ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது உராய்வு காரணமாக வெடிமருந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் வெடிமருந்து குடோன் முற்றிலும் தரைமட்டமானது. சரக்கு வாகனம் நீண்ட தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டது. இந்த சம்பவத்தில், பணியில் ஈடுபட்ட கந்தசாமி, துரை, குருசாமி ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 கல்குவாரி குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி சத்தம் சுமார் 5 கிமீ தூரத்திற்கு கேட்டது. இதனிடையே, கல் குவாரியை நிரந்தரமாக மூடவேண்டும் என வலியுறுத்தி கீழஉப்பிலிக்குண்டு, டி.கடமங்குளம் கிராமங்களை சேர்ந்த மக்கள் மதுரை ௹ தூத்துக்குடி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

  இதையடுத்து அங்கு வந்த எஸ்பி மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா உறுதியளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டனர். இந்த மறியலால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 குவாரி உரிமையாளரான ஆவியூரை சேர்ந்த சேது மீது காரியாபட்டி போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.