சோப்பு வாங்கினால் பரிசு கூப்பன்! பீலாவிட்ட நபர்கள் போலீசிடம் ஒப்படைப்பு!
ஜி.குலசேகரன்,
சோப்பு வாங்கினால் பரிசு கூப்பன் மூலம் வீட்டு உபயோகப்பொருட்கள் தருவதாக ஏமாற்றி பணம் பறித்த கும்பலை பொதுமக்கள் மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மின்னூர், மாதனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல், தாங்கள் விற்கும் சோப்பு வாங்கினால் அதில் விழும் பரிசு கூப்பன் மூலம், டிவி, ஏர் கூல்ர், கேஸ் அடுப்பு, உள்ளிட்ட வீட்டு உபயோகப்பொருட்களை தருவதாக ஆசை வார்த்தை சொன்னார்கள்.
இதற்கு முன் பணம் 7500 ரூபாய் கொடுக்க வேண்டும் எனக் கூறி பல பேரிடம் பணத்தை பறித்து சென்று பொருட்கள் கொடுக்கவில்லையாம்.
ஆனால் ஒரு சிலருக்கு கொடுத்த பொருட்களும் முறையாக வேலை செய்யவில்லை.
இந்நிலையில், மீண்டும் சோப் வாங்கினால் பரிசு கூப்பன் தருவதாக மின்னூர் பகுதியில் வந்தவர்களை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கி பின்னர் அவர்களை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்,
அதனை தொடர்ந்து அவர்களை கைது செய்த ஆம்பூர் கிராமிய போலீசார் அவர்களிடம் விசாரணை செய்த போது வெட்டுவானம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் ,ராஜா மற்றும் பள்ளிகொண்டா பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பது தெரியவந்தது,
அதனை தொடர்ந்து அவர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இதேபோல் வேலூர் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் சோப்பு வாங்கினால் வீட்டு உபயோக பொருட்கள் கொடுப்பதாகவும் அதற்கு முன்பணம் 7500 கொடுக்க வேண்டும் என கூறி பணம் பறித்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வேலூர் சத்துவாச்சாரி காவல்துறையினரும் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

admin
