எடப்பாடி பழனிச்சாமிக்கும் செங்கோட்டையனுக்கும் மோதலா? உடனே சரியாகவில்லையெனில்.....?

எடப்பாடி பழனிச்சாமிக்கும் செங்கோட்டையனுக்கும் மோதலா? உடனே சரியாகவில்லையெனில்.....?

ம.பா.கெஜராஜ்,

  அதிமுகவை பொறுத்தவரை கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலாகட்டும் தற்போது நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலாகட்டும், அவற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு எதிர்கட்சிகாரர்களுக்கு சாதமாக சாதி அடிப்படையில் உள்குத்து வேலை செய்வது, விட்டுக் கொடுப்பது கோஷ்டி மோதல் என்று வெளிப்படையாகவே நடந்து வருகிறது.

இதெல்லாம் தலைமைக்கு இவர்கள் செய்கிற துரோகம் என்று பார்க்கப்படுகிறது.

 இந்நிலையில் தலைமையுடனே சில சீனியர்கள் முட்டி மோதிக்கொண்டிருக்கிறார்கள். இதை வளரவிடாமல் முளையிலேயே கிள்ளி எரிந்தால் கட்சியின் எதிர்காலம் நன்றாக இருக்கும், இல்லையெனில் ஏற்கனவே நீக்கப்பட்ட சீனியர்களுடன் இவர்கள் கைகோர்த்து விவகாரம் ஆகிவிடும் என்று ரத்தத்தின் ரத்தங்கள் அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள்.

 அதிமுகவில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவருக்கு பின்னர் செல்வி ஜெயலலிதா என்று அவர்களுடன் நெருக்கமாக இருந்து அரசியல் செய்தவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். மேற்கு மண்டலம் பகுதியில் அவருக்கென பெரிய செல்வாக்கு உள்ளதை எவரும் மறுக்க இயலாது. தலைமைக்கு எப்போதுமே நம்பிக்கை விசுவாசியாக இருப்பவர் அவர்.

 செங்கோட்டையன் தற்போது ஈரோடில் உள்ள கோபிச்செட்டிபாளையம், அந்தியூர், பவானிசாகர் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான மாவட்டச் செயலாளராக  உள்ளார்.

 இந்நிலையில் அவர் தற்போது மிகுந்த மனவருத்தத்தில் இருப்பதாகவும், பாஜகவில் மாநில தலைவர் பதவி அளித்தார் அதில் சேருவதற்கும் தயாராக அவர் இருப்பதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.

 என்ன விஷயம் என்பதைப் பார்ப்போம்.

 அதிமுகவின் மேற்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் செங்கோட்டையன் மோதத் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் பாஜவில் மாநில தலைவர் பதவி கொடுத்தால் கட்சியில் சேரவும் தயார் என்றும் அவர் கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

  தேர்தலில் போட்டியிட வேட்பாளார் தேர்வு சமயத்திலும் சரி, வேட்பாளர் அறிவித்த பின்னரும், தேர்தலுக்குப் பின்னரும் பல்வேறு கட்டங்களில் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.

  ஆனால் திருப்பூர், ஈரோடு தொகுதிகளில் செங்கோட்டையனிடம் ஆலோசனை நடத்தாமல் எடப்பாடி பழனிசாமியே தன்னிச்சையாக வேட்பாளரை அறிவித்துள்ளார். இதனால் செங்கோட்டையன் கடும் அதிருப்தி அடைந்தார். ஏனெனில் ஈரோடு மாவட்டத்துக்குள் சில தொகுதிகள் திருப்பூர் மக்களவைக்குள்ளும் வருகிறது. இதனால் தன்னிடம் வேட்பாளர் குறித்து எடப்பாடி ஆலோசனை நடத்துவார் என்று செங்கோட்டையன் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தார்.

 இதை சமாளிக்க வேட்பாளர் அறிவித்த நேரத்தில் உடல்நிலை சரியில்லை என்று கூறி கோவையில் உள்ள மருத்துவமனையில் செங்கோட்டையன் சேர்ந்து விட்டார். பின்னர் அவரை சமரசப்படுத்தித்தான் தேர்தல் பணிகளை தொடங்க வைத்தனர்.

  திருப்பூரில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர், டாஸ்மாக் பாரில் வேலை செய்தவராம். எடப்பாடி பழனிசாமிக்கு நெருங்கிய உறவினராம். இதுவும் செங்கோட்டையனின் அதிருப்திக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதனால் திருப்பூர் தொகுதிக்குள் வரும் பெருந்துறை தொகுதியில் அவர் வேலையே செய்யவில்லையாம். மேலும், பெருந்துறை அதிமுக எம்எல்ஏவாக இருக்கும் ஜெயக்குமார், செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளர். இதனால் அவர் எந்த வேலையும் செய்யவில்லையாம்.

  ஆக திருப்பூர் தொகுதிக்காக செங்கோட்டையன் எந்த வேலையும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

   பெருந்துறை, பவானி தொகுதியை உள்ளடக்கிய மாவட்டச் செயலாளராக கருப்பண்ணன் உள்ளார். ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டத்துக்கு கே.வி.ராமலிங்கம் மாவட்டச் செயலாளராக உள்ளாராம். அதில், செங்கோட்டையனுக்கும், கருப்பண்ணனுக்கும் தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறதாம்.

 இதில் கருப்பண்ணனும், எடப்பாடி பழனிசாமியும் நெருங்கிய உறவினர்கள் என்று சொல்கிறார்கள். ஆகவே  கருப்பண்ணனுக்கு ஆதரவாக செல்பட்டு, செங்கோட்டையனை ஊதாசீனப்படுத்துவதாக கூறப்படுகிறது.

 மேலும், தேர்தல் நேரத்தில் அந்தியூர் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளராக இ.எம்.ஆர்.ராஜாவை நியமித்தார் எடப்பாடி. தனது அரசியல் எதிரியான ராஜாவை எப்படி எனக்கு கீழ் உள்ள தொகுதியின் பொறுப்பாளராக நியமிக்கலாம் என்று கோபத்தில் உள்ளாராம்.

 இதனால் ஈரோடு, திருப்பூர் தொகுதிகளுக்கான தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டவில்லையாம்.

இது குறித்து புகார்கள் வந்ததும், திருப்பூர் தொகுதியின் பொறுப்பாளராக வேலுமணியை எடப்பாடி நியமித்து எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியிருக்கிறார்.

  செங்கோட்டையனைப் போலவே  எடப்பாடி மீது  தங்கமணி, கே.வி.ராமலிங்கம் ஆகியோரும் அதிருப்தியில் இருக்கிறார்கள். ஆகவே இந்த டீம்  மாற்று சக்திக்காக தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்களாம்.

   மேலும் பாஜவுக்கு நெருங்கியவரும், நிலக்கரி எடுக்கும் நிறுவனம் நடத்தி வரும் தொழிலதிபருடன் செங்கோட்டையன் தரப்பில் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்று உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வட்டமடிக்கிறது.

 *எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் இணைய செங்கோட்டையனும் தான் உறு துணையாக இருந்தாராமே?