கோடிகளில் ஊழல் செய்யும் சேர்மன்..கூட்டு சேர்ந்த பி.டி.ஓ?

ஜி.கே.சேகரன்,
கந்திலி ஒன்றிய திமுக சேர்மேன் மற்றும் பிடிஓ ஆகியோர் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுப்பட்டு வருவதாக கூறி கவுன்சிலர்களுக்கான கூட்டத்தை புறக்கணித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியத்தில் திமுக 12, அதிமுக8,பாஜக 1,சுயேட்சை 1என மொத்தம் 22கவுன்சிலர்கள் உள்ளனர். இதனையடுத்து கந்திலி ஒன்றிய சேர்மேனாக திமுகவை சேர்ந்த திருமதி.திருமுருகன் என்பவர் உள்ளார்.
இவர் பதவியேற்று கடந்த மூன்று வருடங்கள் முடிவடைந்த நிலையில் இதுவரை நடைப்பெற்ற கவுன்சிலர்களுக்கான கூட்டத்தில் திட்டபணிகளுக்கான தீர்மானம் நோட் கவுன்சிலருக்கு காட்டப்படாமலும், கையெழுத்து பெறாமலும் பல கோடி ரூபாய்க்கான திட்டபணிகள் செய்து உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ஒவ்வொரு கவுன்சிலர்கள் கூட்டத்தின் போதும் அடுத்த கூட்டத்தில் தீர்மானம் நோட் கொண்டுவரப்படும் என கூறிவந்த நிலையில் தற்போது நடைப்பெற்ற கூட்டத்திலும் தீர்மானம் நோட் கொண்டு வரப்படாததால் அதிர்ச்சி அடைந்த அதிமுக கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். மேலும், கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், மட்றப்பள்ளி கவுன்சிலர் சின்னதம்பி கூறுகையில் தன்னுடைய மட்றபள்ளி ஊராட்சிக்கு கடந்த மூன்று வருடங்களாக எந்தவொரு அடிப்படை தேவைகளையும் செய்து தரப்படவில்லை.ஒவ்வொரு கூட்டத்திலும் கேட்டால் அதிமுக கவுன்சிலர் என்பதால் தங்களால் உங்கள் ஊராட்சிக்கு எதுவும் செய்ய முடியாது என திமுக சேர்மேன் அராஜகம் செய்து வருவதாக கடும் குற்றம் சாட்டினார்.
பெரியகரம் அதிமுக கவுன்சிலர் கூறுகையில், கந்திலி ஒன்றியத்தில் கவுன்சிலர்களிடம் தீர்மானம் நோட்டில் கையெழுத்து வாங்காமலே திமுக சேர்மேன் மற்றும் அதிகாரிகள் பல கோடி ரூபாய் கூட்டு கொள்ளை அடித்து வருகிறார்கள். எனவே மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்து சேர்மேன் மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.