ஓடும் காரின் மேற்கூரையில் 40 கி.மீ.! உயிரைப் பணயம் வைத்து குட்கா கடத்தலைத் தடுத்த காவலர் – நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர் விஜய்

ஓடும் காரின் மேற்கூரையில் 40 கி.மீ.! உயிரைப் பணயம் வைத்து குட்கா கடத்தலைத் தடுத்த காவலர் – நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர் விஜய்

செய்தி: ம.பா.கெஜராஜ்,

கோவையில் குட்கா கடத்தலைத் தடுக்கும்போது, தப்பிச் சென்ற காரின் மேற்கூரையில் ஏறி சுமார் 40 கி.மீ. தூரம் பயணித்து கடத்தல் கும்பலை பிடிக்க உதவிய தலைமைக் காவலர் வேல்முருகனை முதலமைச்சர் விஜய் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான கார் ஒன்று போலீஸாரின் சோதனையில் சிக்கியது.

போலீஸார் காரை நிறுத்த முயன்றபோது, அதில் இருந்தவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது கோவில்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமைக் காவலர் வேல்முருகன், தப்பிச் சென்ற காரின் மேற்கூரையில் ஏறி பிடித்துக் கொண்டார்.

காரின் மேற்கூரையில் காவலர் இருப்பதைப் பொருட்படுத்தாமல் கடத்தல்காரர்கள் வாகனத்தை தொடர்ந்து ஓட்டிச் சென்றனர்.

விளாங்குறிச்சியில் இருந்து அவிநாசி நோக்கி சுமார் 40 கி.மீ. தூரம் அந்த கார் சென்ற நிலையில், போலீஸார் தொடர்ந்து துரத்திச் சென்று வாகனத்தை மடக்கிப் பிடித்தனர்.

இதையடுத்து காரில் இருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து சுமார் 233 கிலோ குட்கா பொருட்களும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்த நடவடிக்கையில் தலைமைக் காவலர் வேல்முருகன் காட்டிய துணிச்சலும், சமயோசிதமாக செயல்பட்ட விதமும் கவனம் பெற்றது.

இதையடுத்து முதலமைச்சர் விஜய், தலைமைக் காவலர் வேல்முருகனை தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டியதுடன், பரிசும் வழங்கினார்.

அப்போது பணியில் ஈடுபடும் போது கவனமாகவும், பாதுகாப்பாகவும் செயல்பட வேண்டும் என்றும் அவருக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

காவலரின் துணிச்சலான நடவடிக்கையைப் பாராட்டிய முதலமைச்சரின் இந்த சந்திப்பு தற்போது கவனம் பெற்றுள்ளது