10 லட்சம் சிறுவணிகர்கள் காணாமல் போகும் அபாயம்!
கு.அசோக்,
டோல்கேட் கட்டணம் என்பது ஆண்டுக்கு ஆண்டு வணிகத்தை போலவே உயர்ந்து கொண்டிருக்கிறது.
கார்ப்பரேட் நிறுவனங்கள், ஆன்லைன் வர்த்தகத்தால் 10 லட்சம் சிறுவணிகர்கள் காணாமல் போகும் அபாயம் உள்ளது.
வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா இராணிப்பேட்டையில் பேட்டி.
இராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்ட பொது குழு கூட்ட நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு வணிகர்களிடையே சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், வணிகர்களுக்கு உள்ள வரி, உள்ளாட்சி, நகராட்சி கடை வாடகை, வைப்பு தொகையை குறைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்ற வேண்டும்¢.
கார்ப்பரேட் நிறுவனங்கள் வருகை மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தால் வணிகர்கள் பெரும் பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றனர். இதே நிலை நீடித்தால் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் சிறுவணிகர்கள் காணாமல் போகும் அபாயம் உள்ளது.
எனவே சிறு வணிகர்களை காக்க மத்திய மாநில அரசுகள் தனி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, காலாவதியான டோல்கேட் தமிழகத்தில் அகற்றப்படும் என தெரிவித்தாலும் கூட அதனை செயல்படுத்தவில்லை. மாறாக கூடுதலாக டோல்கேட் அமைத்து கட்டணம் வசூலிக்கிறது. காஞ்சிபுரம் - வேலூர் சாலையில் விரிவாக்க பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை இருந்தாலும், நாங்கள் 6 வழிச்சாலைக்கான டோல் கட்டணத்தை செலுத்தி வருகிறோம். சாலை விரிவாக்கத்திற்கு 25 ஆண்டுகள் கால அவகாசம் அளிக்கும் நிலையில் மத்திய அரசு விரைவாக சாலையை அமைக்க உத்தரவிட வேண்டும் என கூறினார்.
அதேபோல மேம்பாலம் சுரங்கப்பாதைகள் அமைப்பதற்கு மட்டுமே டோல்கேட் கட்டணங்கள் வசூலிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், தற்போது மத்திய அரசு சாலை விரிவாக்கத்திற்கு கூட டோல்கேட் கட்டணத்தை வசூலிப்பதாக குற்றம் சாட்டினார்.

admin
