“அனுமதி வேண்டுமா? முதலில் லஞ்சம் கொடு!” – ₹3 லட்சம் பெற்றதாக குற்றச்சாட்டு; சுற்றுச்சூழல் பொறியாளர் கைது!
செய்தி: ம. டெல்லி ராஜன்,
கிருஷ்ணகிரி:தனியார் கிரஷர் நிறுவனத்துக்கு அனுமதி வழங்குவதற்காக லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் புருஷோத்தமன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூரில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளராக பணியாற்றி வந்த புருஷோத்தமனிடம், மத்தூர் அருகே சிவம்பட்டியில் செயல்பட்டு வரும் ‘கண்ணன் புளு மெட்டல்’ நிறுவனம் அனுமதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது.
அனுமதிக்காக முதலில் ரூ.15 லட்சம் லஞ்சம் கேட்கப்பட்டதாகவும், பின்னர் பேச்சுவார்த்தையில் தொகை ரூ.10 லட்சமாக குறைக்கப்பட்டதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக ரூ.3 லட்சமும், சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னர் மீதமுள்ள தொகையையும் வழங்குவது என முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
லஞ்சம் வழங்க விரும்பாத நிறுவன உரிமையாளர் பிரதாப், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் அதிகாரிகளின் கண்காணிப்பில் பணம் வழங்கப்பட்டதாகவும், அந்தப் பணத்தை புருஷோத்தமன் பெற்றபோது கையும் களவுமாக பிடிபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலகத்தில் மக்களின் பணிகளை சட்ட விதிகளின்படி செய்து கொடுப்பதே அதிகாரிகளின் கடமை. ஆனால், ஒரு அனுமதிக்காகவே லட்சக்கணக்கில் பேரம் பேசப்பட்டதாக கூறப்படும் இந்த சம்பவம், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் போக்குக்கு கடும் கேள்வியை எழுப்பியுள்ளது.
அதிகாரம் என்பது வசூலிப்பதற்கான உரிமை அல்ல; மக்களுக்கு சேவை செய்வதற்கான பொறுப்பு என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உணர வேண்டிய நேரம் இது.

admin
