முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா குற்றவாளி! விசாரணைக் குழு அதிர்ச்சி அறிக்கை!

முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா குற்றவாளி! விசாரணைக் குழு அதிர்ச்சி அறிக்கை!

நரேஷ், என்,

புதுடெல்லி: டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கணக்கில் வராத பெருமளவு பணம் சிக்கிய விவகாரத்தில், அவர் குற்றவாளி என மக்களவை விசாரணைக் குழு முடிவு செய்துள்ளது. மேலும், அவரைப் பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய யஷ்வந்த் வர்மாவின் டெல்லி இல்லத்தில் கடந்த 2025 மார்ச் 14-ம் தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அவர் வீட்டில் இல்லை. தீயை அணைக்க சென்ற தீயணைப்புத் துறையினர், பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் எரிந்த நிலையில் பெருமளவிலான ரூ.500 நோட்டுக் கட்டுகள் இருப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த அறை தனது கட்டுப்பாட்டில் இல்லை என நீதிபதி வர்மா தெரிவித்திருந்தார். இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அறிக்கை அளித்தார்.

தொடர்ந்து, 2025 மார்ச் 22-ம் தேதி மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. குழு விசாரணை நடத்தி, பணம் வைக்கப்பட்டிருந்த அறை நீதிபதி வர்மாவின் கட்டுப்பாட்டிலேயே இருந்ததாகவும், அவர் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பதாகவும் அறிக்கை அளித்தது.

இதற்கிடையே, அவரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி 2025 செப்டம்பரில் மக்களவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சபாநாயகர் ஓம் பிர்லா அதை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

விசாரணைக் குழுவுக்கு எதிராக நீதிபதி வர்மா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து டெல்லி காவல் துறை, சிஆர்பிஎப் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டன.

இந்த நிலையில், இரண்டு தொகுதிகளைக் கொண்ட முழுமையான விசாரணை அறிக்கை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில், நீதிபதி வர்மாவின் வீட்டில் இருந்த பணம் அவருக்குச் சொந்தமானது என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு, அவரைப் பதவி நீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதனால், நீதித்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம், தற்போது அடுத்தகட்ட அரசியல் மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை எதிர்நோக்கியுள்ளது.