விஜய் தேர்தலில் போட்டியிடமுடியாதபடிக்கு சட்டம் இறுக்குமா அல்லது இலகுமா?
ம.பா.கெஜராஜ்,.
தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினரிடம் விஜய் காணொளியில் பேசியிருக்கிறார். இந்நிலையில்
விஜய்யின் கட்சி நடத்திய பேரணியில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விஜயுடன் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
எடப்பாடி பழனிசாமி, விஜய்யுடன் நடத்திய தொலைபேசி உரையாடலில், 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு, திமுக அரசை வீழ்த்த ஒரு கூட்டணியை அமைக்கலாம் என்று யோசனை தெரிவித்ததாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு விஜய் நேரடியாக மறுப்பு தெரிவிக்கவில்லை. மாறாக, முதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து, தனது பிரச்சாரத்தை விரைவில் மீண்டும் தொடங்க விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.
பிரச்சாரத்தின் போது, எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசுவதாகவும், ஜனவரி மாதத்திற்குப் பிறகு கூட்டணி குறித்து முடிவெடுப்பதாகவும் விஜய் உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தொலைபேசி உரையாடல் சுமார் அரை மணி நேரம் நீடித்ததாக கூறப்படுகிறது.
அதிமுகவின் மூத்த தலைவர் ஒருவரும், அக்டோபர் 6 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி விஜய்யுடன் பேசியதை உறுதிப்படுத்தினார். "அவருக்கு (விஜய்க்கு) சிறிது அவகாசம் தேவை என்பதால் நாங்கள் அவசரப்படுத்தவில்லை. ஆளும் திமுக அரசை எதிர்ப்பதில் நாங்கள் முழு ஆதரவு அளிப்போம் என்று தெரிவித்துள்ளோம் என்று அவர் கூறினார்.
விஜய் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே தொலைபேசி உரையாடல் நடந்ததை தவெக செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். ஆனால், உரையாடலின் விவரங்கள் சரியான நேரத்தில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
திமுக தொடர்ந்து விஜய்யின் கட்சியை நெருக்கடிக்குள்ளாக்கினால், அதிமுக மற்றும் தவெக இடையே கூட்டணி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். "திமுக தொடர்ந்து விஜய்யைத் தாக்கினால், அவருக்கு வேறு வழியில்லை. அவர் நிச்சயமாக ஒரு கூட்டணியைத் தேடுவார்.
இந்த கூட்டணி திமுகவின் வெற்றி வாய்ப்புகளைப் பாதிக்கும். இது இப்போது நடக்காது, ஆனால் தேர்தலுக்கு நெருக்கமாக சில மறுசீரமைப்புகள் நடக்கும்," என்று கூறப்படுகிறது.
ஆனால் அதிமுக வில் முதல்வேட்பாளாக பழனிச்சாமியும், தவெக வில் முதல்வர் வேட்பாளராக விஜய்யும் அறிவிக்கப்பட்ட நிலையில் இது எப்படி எடுபடும்.
ஒருவேளை இதையும் மீறி இருகட்சியும் இணைந்தால் ஆள்பவர்கள் மீண்டும் ஆள இயலாமல் போய்விடும் என்பதால் விஜய் மீதான சட்ட நடவடிக்கைகளில் தொய்வு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இல்லையேல் அவரை சட்டம் இறுக்கும் போது தேர்தலில் போட்டியிட இயலாதபடிக் கூட சட்டம் தன் கடமையை செய்யும் என்றும் கருதப்படுகிறது.
இந்நிலையில் தவெக பேரணியில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் காணொளிவாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல் சொன்னதுடன், விரைவில் நேரில் சந்திப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.
எங்களுடன் பெரிய கட்சி கூட்டணி வைக்கப்போகிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசிவருவதை இங்கு நினைவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறோம்.

admin
