தொகுதி வரையரைக்கு விஜய் ... ஸ்டாலின் எதிர்ப்பு!இந்திராகாந்தி வாஜ்பேய் தள்ளிவைத்ததை கையில் எடுக்கும் பாஜக!
ம.பா.கெஜராஜ்,
முன்னாள் பிரதமர்களான இந்திராகாந்தி வாஜ்பேய் தள்ளிவைத்த பிரச்சனையை பாஜக கையில் எடுக்கிறது. ஆம் ஏப்ரல் 16, 17 மற்றும் 18 தேதிகளில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறப்பு கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 543-ல் இருந்து 816 ஆக உயர்த்துவது மற்றும் தொகுதிகளை மறுவரையறை செய்வது தொடர்பான மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
தமிழகத்தில் திமுக முதல் தவெக வரை பல்வேறு கட்சிகளும் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றன. முதல்வர் ஸ்டாலின், 'தொகுதி மறுவரையறை தென் மாநிலங்களுக்கான வரலாற்று அநீதி' என்று கூறி, ஏப்.16 அன்று இதனை எதிர்த்து தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரும் தொகுதி மறுவரையறை சட்டத் திருத்த மசோதாவுக்கு கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
தேசிய அரசியல் களத்தைப் பொறுத்தவரை இண்டியா கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் தங்களின் வலுவான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.
இந்தப் பின்னணியில், தொகுதி மறுவரையறை என்றால் என்ன? அது எப்படி மேற்கொள்ளப்படுகிறது? இப்போது எதிர்க்கப்படுவது ஏன்? மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பன குறித்து சற்றே சுருக்கமாகப் பார்ப்போம்.
தொகுதி மறுவரையறை என்றால் என்ன?
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 82, ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகும், மக்களவை தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்ய நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் அளிக்கிறது.
இது, மக்கள் தொகைக்கு ஏற்ப மாநிலங்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி எல்லைகளை எல்லை நிர்ணய ஆணையம் (டி லிமிடேஷன் கமிஷன்) மூலம் மாற்றியமைப்பதை உறுதி செய்கிறது.
தேர்தல் ஆணையமானது, 'தொகுதி மறுவரையறை என்பது சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின்படி, தொகுதி எல்லைகளை மறுவரையறை செய்தல். இது தேர்தல் கட்டமைப்பு நியாயமானதாக இருப்பதையும், தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளில் மக்கள் பிரதிரிதித்துவம் சமவிகிதத்தில் இருப்பதையும் உறுதி செய்யும்' என்று விளக்கியுள்ளது.
1951-ம் ஆண்டு நாட்டின் முதல் பொதுத் தேர்தலின்போது இந்திய மக்கள் தொகை 35 கோடியாக இருந்தது. அதற்கேற்ப 489 மக்களவை தொகுதிகள் உருவாக்கப்பட்டன. அதன்பின்னர், 1952-ம் ஆண்டு மக்கள் தொகை ஏற்றத்தின் அடிப்படையில், முதன்முறையாக தொகுதி மறுவரையறை 494 ஆக அதிகரிக்கப்பட்டது.
அடுத்த 10 ஆண்டுகளில் அதாவது 1961-ல், இந்திய மக்கள் தொகை 43 கோடி என்றளவை எட்டிய நிலையில், தொகுதிகளின் எண்ணிக்கை 522 ஆக அதிகரித்தது.
1971-ம் ஆண்டு தொகுதி மறுவரையறை செய்யப்பட்டு மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை 543 ஆக உயர்த்தப்பட்டது. அதாவது ஒவ்வொரு எம்.பி.யும் தோராயமாக 10 லட்சம் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் சீரமைக்கப்பட்டது.
1971 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை 2001 வரை மாற்றக் கூடாது என்ற திருத்தத்தை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அரசியலமைப்பு சட்டப் பிரிவு 82-ல் சேர்த்தார்.
இதனால், மக்கள் தொகை அதிகரித்தாலும் புதிய தொகுதிகளை உருவாக்க இயலாது. அதன்பின், 2001-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 25 ஆண்டுகள் ஒத்திவைத்தார்.
2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 2002-ல் தொகுதி மறு சீரமைப்பு செய்யப்பட்டாலும் கூட மக்களவை பிரதிநிதிகளின் எண்ணிக்கை மாறவில்லை.
மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறை செய்தால், மக்கள் தொகை அதிகமாக உள்ள மாநிலங்களில் கூடுதல் பிரதிநிதித்துவமும், குறைவாக உள்ள மாநிலங்களில் குறைந்த பிரதிநிதித்துவமும் ஏற்பட்டு நாடாளுமன்ற சமநிலை பாதிக்கப்படும் என்று அது நிறுத்திவைக்கப்பட்டது.
அப்படியிருக்க, இப்போது 2026-ல் தொகுதி மறுவரையறையை அமல்படுத்துவதில் மத்திய பாஜக அரசு உறுதியாக இருக்கிறது.
அண்மையில் கேரளாவில் தேர்தல் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, "கேரளா, தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள் மக்கள் தொகை கட்டுப்பாடு சார்ந்த நடவடிக்கையில் சிறந்து விளங்கியுள்ளன. இருப்பினும் சில தனிநபர்கள் தவறான தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.
மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்த காரணத்தால் தங்கள் மாநிலங்களுக்கான மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என அவர்கள் சொல்லி வருகின்றனர்.
இந்த விவகாரம் சார்ந்து நாடாளுமன்ற கூட்டத்தில் நாங்கள் உறுதி அளிக்க விரும்புகிறோம். அதில் கேரளா, தமிழகம், ஆந்திரா, கோவா, தெலங்கானா என எந்த மாநிலத்திலும் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படாது என தெரிவித்துக் கொள்கிறோம்.
அனைத்து மாநிலங்களும் பலன் பெறுகின்ற வகையில் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும்," என்று உறுதியளித்தார். இதே கருத்தை உள் துறை அமைச்சர் மோடியும் கூறி வருகிறார்.
இந்த சமாதானங்கள் எதையும் எதிர்க்கட்சிகள் ஏற்பதாக இல்லை. இவ்விகாரம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், "மக்களவையில் தமிழ்நாட்டின் எண்ணிக்கை தற்போது 39. இது 58 ஆக உயரும் என்று சொன்னார்கள். இது வெறும் மாயை என்று நான் சொன்னேன் தொகுதி மறுவரையறை செய்யும்போது 58 என்பது 46 ஆக குறையும்.
அதே நேரத்தில், உத்தரப் பிரதேசத்தின் தற்போது எண்ணிக்கை 80. இது முதலில் 120 ஆக உயரும், தொகுதி மறுவரையறைக்குப் பின் சுமார் 140 ஆக மேலும் உயரும்
மக்கள் தொகையை நிலைப்படுத்திய 5 தென் மாநிலங்களின் தற்போதைய பிரதிநித்துவம் 24.3%. இது குறைந்து 20.7% ஆகும்.
மக்களவையில் தென் மாநிலங்களின் குரல் அழுத்தப்படும், ஒடுக்கப்படும்
அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை ஒற்றுமையாக எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
மேலும், தமிழகம், மேற்கு வங்கம் மாநிலங்கள் தேர்தலில் பரபரப்பாக இருக்கும் சூழலில் அவசர அவசரமாக இந்த சட்டத் திருத்ததுக்கு என்ன அவசரம் என்றும் அவர் வினவியுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை:
"அளவாகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள், குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைபிடியுங்கள்" என ஒன்றிய அரசு சொன்னதையெல்லாம் நாங்கள் கேட்டோம்.
சொன்னதை ஒழுங்காகச் செய்ததற்காகவே எங்களுக்குத் தண்டனை தருவீர்களா? 'தென் மாநிலங்கள் பாதிப்படையாது' என நாடாளுமன்றத்தில் வைத்துப் பிரதமர் உத்தரவாதம் தர வேண்டும் என்று கேட்டோம். பதில் இல்லை.
அவசரக அவசரமாக டீலிமிட்டேஷன் செய்ய நினைப்பது, பாஜக அரசின் அப்பட்டமான ஜனநாயக விரோதச் செயல்.
இன்னும் சொன்னால், மாநில உரிமைகளைப் படுகொலை செய்திருக்கிறார்கள். இந்த டீலிமிட்டேஷனை எப்படி செய்ய போகிறார்கள் என்று தெரியவில்லை. அந்தச் சட்டத் திருத்தம் என்ன என்பது பற்றி, இதுவரை எந்த விளக்கத்தையும் கொடுக்காமல் இருக்கிறார்கள்.
இவர்கள் இப்படி மறைத்து மறைத்துச் செய்கிறார்கள் என்றால், கண்டிப்பாக ஏதோ பெரிய ஆபத்து இருக்கிறது.
நடக்க இருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், எங்கள் எம்.பி.க்கள் கலந்து கொள்வார்கள். தமிழ்நாட்டை பாதிப்பது போன்றோ, வடமாநிலங்களுக்கு அரசியல் வலிமையை மேலும் வாரி வழங்குவது போன்றோ, ஏதாவது நடந்தால், தமிழ்நாட்டில் இருக்கும் நாங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம்.
மத்திய அரசு கொண்டுவரவுள்ள தொகுதி மறுவரையறை திருத்த மசோதா, தென் மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் மாபெரும் வரலாற்று அநீதி" என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இத்துடன் கருப்புக் கொடி போராட்டத்தையும் அறிவித்துள்ளார்.
விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை
தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026 நிறைவேறினால், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கும், வட மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கும் இடையே உள்ள விகிதாசார வேறுபாடு, வெகுவாக அதிகரிக்கும்.
அப்படி நிகழ்ந்தால், மொழி, கலாசாரம் மற்றும் மாநில உரிமைகள் சார்ந்த சட்டங்கள் இயற்றுதல் மற்றும் ஒன்றிய அரசின் கொள்கைகள் வகுத்தல் உள்ளிட்டவற்றில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்து, வட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும்.
இதனால் தென் மாநில மக்களின் கோரிக்கைகள், குறிப்பாக ஒன்றிய அரசின் அறிவிப்புகளை முழுமையாகக் கடைப்பிடித்த தமிழ்நாட்டு மக்களின் குரல், நாடாளுமன்றத்தில் ஒலிக்காமல் போகும்.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், நிதிப் பகிர்விலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை - விகிதாசாரம் மாறுவது, மாநிலத்திற்கான நிதி ஒதுக்கீட்டிலும் எதிரொலிக்கும்.
தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகு, மக்கள் தொகை அடிப்படையிலான திட்டங்களுக்கான நிதி மேலும் குறையவே வாய்ப்புள்ளது.
இப்படிப் பல்வேறு வகைகளில் தென் மாநிலங்களுக்கு, குறிப்பாகத் தமிழ்நாட்டிற்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026 நிறைவேற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

admin
