அமைச்சர் நிகழ்ச்சியில் தள்ளு முள்ளு! உபகரணங்களை அள்ளிச்சென்ற நபர்கள்!
கு.அசோக்,
வாலாஜா அருகே விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் ஒருவருக்கொருவர் பொருட்களை பெற்று கொள்ள முந்தி கொண்டதால் சலசலப்பு - முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என பொதுமக்கள் புகார்..
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாநில சுற்றுச்சூழல் அணி சார்பில் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த பொண்ணப்பத்தாங்கல் கூட்ரோடு பகுதியில் நடைபெற்றது.

மாநில சுற்றுச்சூழல் அணி செயலாளர் வினோத்காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்விற்க்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஏராளமான இளைஞர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் தங்களுக்கு கிடைக்குமோ கிடைக்காதோ என்ற எதிர்பார்ப்பில் வரிசையில் வராமல் ஒருவரை ஒருவர் முந்தி அடித்து சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதற்கிடையே வழங்கப்படுவதற்காக வாங்கி வைத்திருந்த விளையாட்டு உபகரணங்களை திடீரென ஒரு சிலர் எடுத்துச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நிகழ்ச்சிக்கு முறையான ஏற்பாடு செய்யப்படாத காரணத்தினால் இந்த நிகழ்வில் இதுபோன்று தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

admin
