திடீரென்று பிரச்சார வாகனத்திலிருந்து இறங்கிய முதலமைச்சர்!

திடீரென்று பிரச்சார வாகனத்திலிருந்து இறங்கிய முதலமைச்சர்!

 ம.பா.கெஜராஜ்,

 மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதிமாறன், வடசென்னை வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர், ஐசிஎப் பகுதியில் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.   

 சிறுபான்மையின மக்களும், கூட்டணி கட்சியினரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 நான் முதல்வன் திட்டத்தால் தங்களுக்கு திறன் மேம்பட்டு, வேலைவாய்ப்பு எளிதில் கிடைத்தற்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர். எப்போதும் நாங்கள் திமுகவின் பக்கம் தான் நிற்போம் என்று தெரிவித்தனர். போலியான கேரண்டிகள் கொடுக்கும் மோடியை நம்ப மாட்டோம். சொல்லியதைச் செய்வது மட்டுமல்லாமல், சொல்லாததையும் செய்து முடிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளோம்.

   அதனால் உதயசூரியனுக்கே எங்கள் வாக்கு என்று எல்லோரும் சேர்ந்து முழங்கினர். முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகைக்காக அந்தப் பகுதி மக்கள், வீட்டு வாசலில் வண்ணக் கோலமிட்டு, தோரணங்கள் கட்டி, ஆர்வத்தோடு திரண்டு நின்று இசை வாத்தியங்களோடு வரவேற்றனர்.

 அப்போது,  ஜி.கே.எம்.காலனி பகுதியில் திறந்த ஜீப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்த போது திடீரென வாகனத்தில் இருந்து இறங்கி வந்து அந்த பகுதியில் கால்பந்து விளையாடிய குழுவினருடன் சேர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினும் கால்பந்து விளையாடினார். மேலும் கால்பந்து விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து கூறி, வசதிகள் ஏதும் தேவைப்படுகிறதா என்று விசாரித்தார்.

   அந்தப் பகுதியே விழாக் கோலம் பூண்டிருந்தது. இந்நிகழ்வின் போது, இந்துசமயஅறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி, மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கிரிராஜன், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத் தலைவர் ரங்கநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

  முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தென்சென்னை தொகுதி வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன், மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் தயாநிதிமாறன் ஆகியோரை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார். நடைபயணம் மூலம் மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்கவும் திட்டமிட்டுள்ளார். தொடர்ந்து அவர் மத்திய சென்னை தொகுதி, தென்சென்னை தொகுதியை இணைக்கும் மைய பகுதியான பெசன்ட்நகரில் பிரசாரத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார். அங்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மு.க.ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்து பேசவிருக்கிறார்.