திமுக கோட்டையில் ஓட்டை
ம.பா.கெஜராஜ்
திமுகவின் கோட்டை என்று சொல்லப்படும் வேலூர் தொகுதியில் உள்குத்து வேலை நடந்து இருப்பதை ஏற்கனவே தலைமைக்கு சில நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல்களை தட்டி விட்டு இருக்கின்றன.
ஆனாலும் கூட அந்த ஓட்டையை அடைப்பதுடன், மற்ற சில பணிகளிலும் திமுக தரப்பு மந்தம் காட்டி வருவதால் இம்முறை கோட்டை விட்டு விடுவார்களோ என்று அச்சம் அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.
குறிப்பாக வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் சட்டமன்ற தொகுதியில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர், பெருவாரியாக திமுகவில் உள்ளனர்.
அவர்களில் பலர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளாகவும் உள்ளனர். அவர்கள் தற்போது நடைபெறும் தேர்தலில் திமுகவுக்கு டாட்டா காட்டிவிட்டு அவர் சமுதாயத்தைச் சார்ந்த வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள்.
இதை திமுக வேட்பாளரும் அவரது தந்தையும் நன்கு அறிந்திருக்கிறார்கள். இருந்த போதும் அவற்றை சரி செய்ய பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் பல பகுதிகளில் அதை நிறைவேற்ற முடியவில்லை.
குறிப்பாக வேலூர் நகர்ப்புறத்தில் 45 வது வார்டு உட்பட பல்வேறு இடங்களில் உள்ள கவுன்சிலர், முன்னாள் கவுன்சிலர் போன்றவர்கள் திமுகவுக்கு வாக்கு கேட்பதை விட தமது சமுதாயத்தைச் சேர்ந்த எதிர்கட்சி சேர்ந்தவருக்கு வாக்கு சேகரித்து வருகிறார்களாம்.
திமுக தரப்பில் கொடுக்கப்பட்ட பசையை கூட அமுக்கிக் கொண்டு திமுகவுக்கு துரோகம் செய்கிறார்கள் என்று உடன்பிறப்புகள் கொதித்து எழுந்திருக்கிறார்கள்.
இது ஒரு புறம் இருக்க வேலூரில் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் சி.ஞானசேகரன். அவர் பரபரப்பான அரசியலுக்கு சொந்தக்காரர் ஆவார். வேலூர் தொகுதியை பொருத்தவரை அவரை சட்டமன்ற கதாநாயகன் என்று தான் மக்கள் அழைப்பர். மக்கள் செல்வாக்கு மிகுந்தவர்.
அவர் திமுகவில் முக்கிய நிர்வாகியாக இருக்கும் நிலையில் அவரது தேர்தல்பணிகளை முழுமையாக திமுக வேட்பாளர் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதை பார்க்க முடிகிறது.
இருப்பினும் அவர் தன்னுடைய பாணியில் திமுகவுக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.
அதே போல் ப.நீலகண்டன், இவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் திமுகவில் உள்ளார். இவருக்கென்று தனி வாக்கு வாங்கி உள்ளது. அவரைக் கூட தேர்தல் பணிக்காக திமுக வேட்பாளர் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற குறைபாடு உள்ளது.
இவர்களைப் போலவே வி.எஸ்.விஜய், இவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தான். செல்வி ஜெயலலிதா முதல்வராக இருந்த போது இவர் சுகாதாரத்துறை அமைச்சராகவும் இருந்தவர்.
இவரைக் கூட திமுக வேட்பாளர் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தவில்லை.
மேற்கண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மூவருமே அண்ணா திமுகவிலிருந்து வந்தவர்கள்.
திமுகவில் ஒரு குரூப் அதிகார மையமாகவே இருக்க வேண்டும் என்கிற உள் நோக்கத்துடன் திமுக வேட்பாளருக்கு எதிராக இப்படி செயல்பட்டு வருகிறார்கள். ஆகவே இதுவரை திமுக கோட்டையாக இருந்து வந்த வேலூரில் தற்போது ஓட்டை விழுந்திருக்கிறது.
ஏற்கனவே திமுக தலைவர் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் தெரிவிக்கையில் தேர்தல் பணிகளில் எந்த பகுதியில் வாக்கு குறைவாக இருக்கிறதோ அந்தப் பகுதி நிர்வாகி அதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று கூறி இருப்பதை உடன்பிறப்புகள் நினைவு கூர்ந்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

admin
