முட்டாள் தனமாக அறிவிக்கப்பட்ட தொகுதி! போட்டியின்றிதேர்வு செய்யப்பட்ட பெண் தலைவர் பதவி நீக்கம்! உயர்நீதிமன்றம் அதிரடி!

முட்டாள் தனமாக அறிவிக்கப்பட்ட தொகுதி! போட்டியின்றிதேர்வு செய்யப்பட்ட பெண் தலைவர் பதவி நீக்கம்! உயர்நீதிமன்றம் அதிரடி!

 நூ.அ.பிலால், 

 ஆம்பூர் அருகே நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவியை பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்திருக்கிறது.

 திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சியானது, ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற போது பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்க்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

 அப்பகுதியில் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்கள் யாரும் இல்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் தேர்தலில் போட்டியிடுவதையும், வாக்களிப்பதையும் புறக்கணித்தனர்.

 இந்த ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளன. இதில் 3 ஆயிரத்து 440 வாக்காளர்கள் உள்ளனர். ஆனால் கிராம மக்கள் தொகையில் 66 சதவீதம் பழங்குடியினரும், 34 சதவீதம் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.

  தாழ்த்தப்பட்ட பட்டியலினத்தவர்கள் ஒருவர் கூட இல்லை. இருப்பினும் இந்துமதி என்பவருக்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

  இதில்  பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர்கள் மற்றும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும்போது ஒட்டுமொத்த மக்கள் தொகையின் விகிதாச்சார அடிப்படையில் தான் இடஓதுக்கீடு பின்பற்ற வேண்டும் என விதி உள்ளது.

  இருப்பினும் இங்கு இந்த விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என தேர்தல் ஆணையத்திடமும் முதலமைச்சரின் தனி பிரிவிலும் மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு துறை அதிகாரிகளிடம் கிராம மக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

  இந்த நிலையில் காமனூர் தட்டு பகுதியைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சார்ந்த பாண்டியன் என்ற இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த இந்துமதி என்பவர் தேர்தலில் போட்டியிட்டார்.

  ஆனால் அவரை எதிர்த்து எவரும் போட்டியிடாததால் போட்டியின்றி ஊராட்சி மன்ற தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டார்.

   இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் மக்கள் சார்பில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் மற்றும் வார்டு உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இந்துமதி பதவி ஏற்பதை தடை செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்தனர்.

  அப்படியிருக்க, இந்த வழக்கு நீதிபதி வி.கே.இளந்திரையன் அமர்வில் இன்று வெள்ளிக்கிழமை (20.09.2024) விசாரணைக்கு வந்தது.

  அப்போது நீதிபதி, நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்தது ரத்து செய்யப்படுகிறது. மேலும் ஊராட்சி மன்றத் தலைவராக இந்துமதி தேர்வு செய்யப்பட்டதும் ரத்து செய்யப்படுகிறது. 4 வாரங்களில் நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு பொதுப் பிரிவைச் சேர்ந்த பெண் அல்லது பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

  இவ்வளவு பிரச்சனைகளுக்கு காரணமான முட்டாள் அலுவலர் யார் என்பதை கண்டறிந்து அவரை வெளுத்து வாங்க வேண்டுமல்லவா?