நடைபாதை ஆக்கிரமிப்பால் பொதுமக்களுக்கு அவதி! அகற்றச் சென்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதிராக வியாபாரிகள் சாலை மறியல் – போக்குவரத்து ஸ்தம்பிப்பு!
செய்தி: கு. அசோக்,
வேலூர் மாநகராட்சிப் பகுதிகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்து சாலையோரக் கடைகள் அமைக்கப்படுவதால் பாதசாரிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், தொரப்பாடி பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டு, சாலையோரக் கடைகளின் விளம்பரப் பலகைகள், பொருட்கள் மற்றும் நிரந்தரக் கடைகளின் வெளிப்புறத்தில் வைக்கப்பட்டிருந்த பொருட்களைப் பறிமுதல் செய்து லாரியில் ஏற்றினர்.
மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு தொடர்பாகவும் கடை கடையாகச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள், வேலூர் – அரியூர் சாலையில் தொரப்பாடி பகுதியில் சாலையில் அமர்ந்தும் படுத்தும் மறியலில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அந்தச் சாலையில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. காலையிலேயே பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பணிக்குச் செல்வோர் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தனர்.
இந்நிலையில் நடைபாதை வியாபாரிகள் சங்கம் என்ற பெயரில் சங்கங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது மட்டுமே பொது இடங்களை ஆக்கிரமிப்பதற்கான அனுமதியாகிவிடாது.
மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது சட்டப்படியான நடைமுறைகளையும், உரிய அறிவிப்பு மற்றும் விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.
அதேபோல், சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியலில் ஈடுபடுவோர் மீதும், சட்ட மீறல் இருந்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நடைபாதைகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு பாதசாரிகளின் பயன்பாட்டிற்கு வழங்குவதுடன், வாழ்வாதாரத்தை நம்பியுள்ள சாலையோர வியாபாரிகளுக்கும் சட்டப்படியான மாற்று ஏற்பாடுகளைச் செய்து தர மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.

admin
