பட்டா இடங்களை புறம்போக்கு என்று காட்டும் நகராட்சி கணினி!

பட்டா இடங்களை புறம்போக்கு என்று காட்டும் நகராட்சி கணினி!

 ஜி.கே.சேகரன்,

 வாணியம்பாடி  நகராட்சிக்குட்பட்ட 23 மற்றும் 24 வது வார்டு மக்களுக்கு நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் நகர முழுவதும் சுமார் 1400 பட்டா இடங்கள் அரசு புறம்போக்கு என்று அரசு தள கணினியில் பதிவாகியுள்ளதால் இடத்தின் உரிமையாளர்கள் இடத்தை வாங்கவும், விற்கவும் முடியாத சூழல். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை.

 திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி 23 மற்றும் 24 வது வார்டு பகுதி மக்களுக்கான 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் பஷீரபாத் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

  முகாமிற்கு நகராட்சி ஆணையாளர் ரகுராமன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்திரவல்லி, நகரமன்ற தலைவர் உமா சிவாஜி கணேசன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

  முகாமில் கலைஞர் மகளிர் உரிமை தொகை, வருவாய் துறை, மின்சார துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை  உள்ளிட்ட 14 பல்வேறு துறைகளுக்கான தனித்தனி அரங்குகள் அமைக்கப்பெற்று, அந்தந்த துறைகளுக்கு தொடர்பான மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.

  மனுக்களை பதிவுசெய்து, அதற்கான விண்ணப்ப ரசீது பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. முகாமில் பெண்கள் உரிமை தொகை, மின் இணைப்பு பெயர் மாற்றம் மற்றும் பட்டா பெயர் மாற்றத்திற்கு பொதுமக்கள் அதிக அளவில் வரிசையில் நின்று மனுக்கள் வழங்கினர்.

  மேலும் பஷீராபாத், ஷாகிராபாத், சலாமாபாத் ஆகிய பகுதிகளில் கடந்த 5 வருடத்திற்கு முன்பு பிளாட்டுகளை சப் டிவிஷன் செய்த போது புதிய நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது.

  இதனால் பழைய பட்டா எண்ணுக்கும் புதிய பட்டா எண் மாறுபட்டு இருப்பதால் பட்டா பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

  இதேபோல் வாணியம்பாடி நகர முழுவதும் சுமார் 1400 பட்டா இடங்கள் அரசு புறம்போக்கு என்று அரசு தள கணினியில் பதிவாகியுள்ளதால் இடத்தின் உரிமையாளர்கள் இடத்தை வாங்கவும், விற்கவும் முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

  இது குறித்து இடத்தின் உரிமையாளர்கள் வட்டாட்சியரிடம் சென்று கேட்டால், கோட்டாட்சியரை கை காட்டுகின்றனர், அங்கே சென்று கேட்டால் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கேளுங்கள் என்று அலைகழிக்கப்பட்டு வருகின்றனர்.

   ஆகையால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான  சான்றிதழ்களை  மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி மற்றும் நகர மன்ற தலைவர் உமா சிவாஜி கணேசன் வழங்கினர்.

  முகாமில் நகரமன்ற உறுப்பினர்கள்,  வருவாய்த் துறையினர், நகராட்சி அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், பணியாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.