தனியார் பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் நடந்தால் மறைக்கக் கூடாது!அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு!

தனியார் பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் நடந்தால் மறைக்கக் கூடாது!அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு!

ம.டெல்லிராஜன்,

 தனியார் பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் நடந்தால், பள்ளியின் பெயருக்கு களங்கம் ஏற்படும் என நினைத்து மறைக்கக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறை, தனியார் பள்ளிகள் இயக்ககம் சார்பில், தனியார் பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடத்தப்பட்டது.

 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியேர் தொடங்கி வைத்தனர்.

    மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார், எம்எல்ஏக்கள் பர்கூர் மதியழகன், ஓசூர் பிரகாஷ், மேயர் சத்யா, தனியார் பள்ளிகள் இயக்குநர் குப்புசாமி, பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் சுகன்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இப்பயிற்சி முகாமில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியதாவது: "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், அனைத்து தனியார் பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்களுக்கான பாலியல் குற்றங்களில் குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) குறித்து விழிப்புணர்வு பயிற்சி, கிருஷ்ணகிரியில் தொடங்கப்பட்டுள்ளது.

   இப்பயிற்சிக்காக ரூ.4.94 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 90 ஆயிரம் பேருக்கு இப்பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணஅளிக்கப்படுகிறது.

மேலும், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் உள்ள தாளாளர், முதல்வர், பள்ளி ஆசிரியர்களை நம்பித் தான் பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

  பெற்றோர்கள் நம் குழந்தைகளை ஆசிரியர்களிடம் ஒப்படைத்து விட்டோம், இனி அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்கிற நம்பிக்கையில் உள்ளனர். பெற்றோர்கள் வைத்த நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும்.

   தனியார் பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் நடந்தால், பள்ளியின் பெயருக்கு களங்கம் ஏற்படும் என நினைத்து மறைக்கக் கூடாது. யாரோ பெற்ற பிள்ளைதானே என்றில்லாமல், நம் பிள்ளைக்கு அந்த நிலைமை வந்தது என்று சொன்னால் நாம் எப்படி வெகுண்டெழுவோமோ அதைவிட இரண்டு மடங்கு வெகுண்டெழுந்து, குழந்தைகளுக்கு பாதுகாப்பு அரணாக விளங்க வேண்டும்.

   தொடர்புடையவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவதன் மூலம், பள்ளியின் மீது பெற்றோருக்கு நம்பிக்கை அதிகரிக்கும்.

  ஒருசில குழந்தைகள் தங்களது பெற்றோர்களிடம் பேசுவதற்கு அஞ்சுவார்கள். வகுப்பறையில் நன்றாக பேசி, சிரிக்கக்கூடிய மாணவர்கள் தனியாக அமைதியாக இருக்கும் பட்சத்தில் அவர்களை கண்காணித்து, அவர்களை பற்றி பெற்றோர்களிடம் பேச வேண்டும்.

 குழந்தைகளின் மனநிலை மாறுவதை கண்டறிவது ஆசிரியர்களின் மிகப்பெரிய பொறுப்பாகும். தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் பயிலும் 1 கோடியே 29 லட்சம் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பாதுகாப்பாக இருந்திட அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

    எங்கள் பள்ளியில் இனி பாலியல் குற்ற நிகழ்வுகள் எதுவும் நடக்காத வண்ணம் செயல்படுவோம் என்று ஆசிரியர்கள் உறுதியுடன் செல்ல வேண்டும்.

  அரசுப் பள்ளிகளில் 'மாணவர் மனசு' பெட்டி வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்ய 14417 மற்றும் 1098 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள் பற்றி விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு புத்தகத்திலும் இந்த எண்கள் அச்சிடப்பட்டுள்ளது" என்று அமைச்சர் பேசினார்.