லாட்டரிசீட்டு விற்றவரை போலீசாரே தப்ப விட்டனரா? எஸ்.ஐ. உட்பட இருவர் மீது எஸ்பி நடவடிக்கை!
ஜி.கே.சேகரன்,
நாட்றம்பள்ளியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த நபர் மருத்துவமனையில் உடற்தகுதி சான்று வாங்க சென்ற நிலையில் போலீசாரின் கண்களில் மண்ணை தூவி தப்பிய ஓடிய விவகாரம் எஸ்ஐ உட்பட இரண்டு பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்!.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரிகள் அதிக அளவில் விற்பனை நடைபெற்று வருவதாகவும் இதனால் கூலி தொழிலாளிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில், தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்னர் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த நாட்றம்பள்ளி பகுதியை சேர்ந்த பழனி (48) முருகேசன் (62), பச்சூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (58) மற்றும் கங்காதரன்(46) ஆகிய 4 பேரையும் பிடித்து நாட்றம்பள்ளி காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

பின்னர் நான்கு பேரையும் சிறைக்கு அனுப்ப நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் உடற்பகுதி சான்று வாங்க காவல் உதவி ஆய்வாளர் மஞ்சுநாதன் மற்றும் காவலர் சீனிவாசன் ஆகியோர் நான்கு பேரையும் அழைத்துச் சென்றனர்.
அப்போது போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவி கங்காதரன் மட்டும் அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் அவசர அவசரமாக மற்ற மூன்று பேரையும் கைது செய்து சிறைக்கு அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி பணியின்போது மெத்தனமாகவும், கவனக்குறைவாகவும் செயல்பட்டதன் காரணமாக காவல் உதவி ஆய்வாளர் மஞ்சுநாதன் மற்றும் காவலர் சீனிவாசன் ஆகிய இருவரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

admin
