கலெக்டர் வரும் போது மட்டும் தண்ணீரை அகற்றுகிறார்கள்! திருப்பத்தூர் மக்கள் வேதனை!

கலெக்டர் வரும் போது மட்டும் தண்ணீரை அகற்றுகிறார்கள்! திருப்பத்தூர் மக்கள் வேதனை!

ஜி.கே.சேகரன்,

நகராட்சிக்குட்பட்ட புதுப்பேட்டை ரோடு பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் அடியில் மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதி.

   திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூரிலிருந்து புதுப்பேட்டை செல்லும் நகராட்சிக்குட்பட்ட  புதுப்பேட்டைரோடு பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தினந்தோறும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் பயணிக்கின்றனர்.

  இந்த நிலையில் மழை பெய்யும் பொழுதெல்லாம் அந்த ரயில்வே மேம்பாலத்தின் அடியில் முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கி நிற்கிறது.

 இதன் காரணமாக பல்வேறு கிராமங்களில் இருந்தும் விடியற்காலை நேரத்தில் அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறிகள், உள்ளிட்டவைகளை எடுத்து செல்லும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தேங்கி நிற்கும் மழைநீரில் விழுந்து எழுந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

  அதுமட்டும் இல்லாமல் தினந்தோறும் அவ்வழியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் பலரும் சென்று வருகின்றனர்.

  இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அவ்வழியாக செல்லும் நேரத்தில் மட்டும் நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்துவதாகவும்  மற்ற நேரத்தில் நகராட்சி நிர்வாகம் அதனை கண்டு கொள்வதில்லை என அப்பகுதி மக்களும், வாகனஓட்டிகளும் குற்றம்சாட்டுகின்றனர்.

   இதனால் அவ்வழியாக செல்லக்கூடிய பொதுமக்களும் விவசாயிகளும் பள்ளி மாணவ மாணவிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

   மேலும் இந்த சம்பவம் பல ஆண்டுகளாக அரங்கேறி வருவதாகவும் இதனை துறை சார்ந்த அதிகாரிகள் கவனத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

  இந்த நிலையில் திடீரென அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.