வக்ஃப் வாரிய சொத்துக்களை அபகரித்தால்… இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை!!
T.E.முகமது,
தருமபுரி மாவட்டம், செட்டிக்குளம் ஊராட்சியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள், தங்கள் நிலங்களின் மீது எந்தவித உரிமையும் கொண்டாட முடியாமல் தவிக்கின்றனர். வக்ஃப் வாரியத்தின் சொத்துக்கள் என்று அவை அடையாளம் காட்டப்படுவதால் இந்த பிரச்சனை எழுந்திருக்கிறது.
செட்டிக்கரை ஊராட்சியில் என்ன பிரச்னை? தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் விளக்கம் என்ன?
தருமபுரி மாவட்டத்தில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் செட்டிக்கரை ஊராட்சி அமைந்துள்ளது.
இந்த ஊராட்சியில் டாக்டர் கான் காலனி, பள்ளக்கொல்லை, குரும்பட்டி ஆகிய பகுதிகள் உள்ளன. இவற்றில் உள்ள சுமார் 166 ஏக்கர் நிலங்களுக்கு வக்ஃப் வாரியத்தின் வடிவில் சிக்கல் முட்டுக்கட்டை போடப்பட்டிருக்கிறது.
"சுமார் 35 வருடங்களுக்கு முன்பு சபியுல்லா கான் என்பவர் 2000 சதுர அடி அளவுள்ள நிலத்தை சம்பத் என்பவருக்கு விற்றார். அதை மகன் கதிரவன் பெயருக்கு தானப் பத்திரமாக மாற்றிக் கொடுத்துவிட்டனர்"
தனது நிலத்தைக் கிரயம் செய்வதற்காக கடந்த ஜூலை மாதம் முதல் வாரத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் சென்ற தனக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
"வக்ஃப் வாரிய நிலம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால், பத்திரப்பதிவு முடக்கப்பட்டுள்ளதாக தருமபுரி சார்-பதிவாளர் அலுவலகத்தில் கூறி பதிவு செய்யாமல் திருப்பி அனுப்பிவிட்டனர்.
பத்திரப்பதிவு முடக்கப்பட்டுவிட்டதால் பலரும் வங்கியில் கடன் பெற முடியாமல் தவிப்பதாகவும் தங்களின் பத்திரத்தை அடமானமும் வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தருமபுரி மாவட்ட வட்டாட்சியர் அலுவலத்தில் ராமசாமி என்பவர் மனு கொடுத்துள்ளார். இதற்கு ஜூலை 9 அன்று தலைமையிட துணைத் தாசில்தார் பதில் அனுப்பியுள்ளார்.
அந்த மனுவில், 'செட்டிக்கரை ஊராட்சி 'அ' பதிவேட்டில் வக்ஃப் வாரிய சொத்து எதுவும் இல்லை' எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், சார் பதிவாளர் அலுவலகத்தில் நிலத்தைக் கிரயம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் ராமசாமி தெரிவித்தார்.
"கணேசன் என்பவரிடம் பத்து சென்ட் நிலத்தை வாங்குவதற்கு முன்தொகை கொடுத்தேன். தருமபுரி சார் பதிவாளர் அலுவலகம் சென்றபோது, வக்ஃப் வாரிய நிலம் எனக் கூறி மறுத்துவிட்டனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் திரண்டு சென்று மனு கொடுத்தனர்" என ராமசாமி சொல்கிறார்.
மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட புகார் மனுவில், 'செட்டிக்கரை கிராமத்தில் 51 சர்வே எண்களில் உள்ள 166 ஏக்கர் நிலத்தை முடக்கிவிட்டனர். மாவட்ட பதிவாளரிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. தமிழ்நாடு வக்ஃப் வாரிய இணையதளத்தில் நிலம் தொடர்பாக எந்த விவரங்களும் இல்லை' எனக் கூறப்பட்டிருந்தது.
'நிலத்தின் மீது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பத்திரப்பதிவு தடையை நீக்க வேண்டும்' எனவும் மனுவில் கூறியிருந்தனர்.
ஆனால், செட்டிக்கரை ஊராட்சியில் வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமான நிலங்கள் உள்ளதாக 2022 ஆம் ஆண்டில் தமிழ்நாடு வக்ஃப் வாரிய முதன்மை செயல் அலுவலர். பத்திரப்பதிவுத் துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், செட்டிக்கரையில் உள்ள சர்வே எண்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.
இதன்பேரிலேயே பத்திரப்பதிவு முடக்கப்பட்டதாக, சார்-பதிவாளர் அலுவலக அதிகாரி ஒருவர் சொல்கிறார்.
தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் முதன்மை செயல் அலுவலராக இருந்த பரீதா பானு, 2022, பிப்ரவரி 21 அன்று அனுப்பியுள்ள கடிதத்தில் செட்டிக்கரை ஊராட்சியில் உள்ள 51 சர்வே எண்களைப் பட்டியலிட்டிருந்தார்.
வக்ஃப் சட்டம் 1995ன் பிரிவு 104கின் கீழ் சொத்துக்களை விற்பனை செய்தல், பரிசு, பரிமாற்றம், அடமானம் வைத்தல் அல்லது மாற்றுவதைத் தடை செய்தல் தொடர்பாக கடிதம் தெரிவிக்கிறது.
கடிதத்தில், 1908 ஆம் ஆண்டு பதிவுச் சட்டத்தின் (மத்திய சட்டம் 1908) பிரிவு 22-கின் கீழ், வக்ஃப் சொத்து தொடர்பான ஆவணங்களில் வாரியத்தின் தடையில்லா சான்று வழங்கப்படாவிட்டால் அவற்றை பத்திரப் பதிவு செய்ய மறுக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
வக்ஃப் சொத்துகளை வாரியத்தின் அனுமதியின்றி கையகப்படுத்தினால் வக்ஃப் சட்டம் 1995 பிரிவு 52ஏ-வின்படி இரண்டு ஆண்டுகள் வரை கடுமையான சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரிவின் கீழ் தண்டிக்கப்படும் எந்தவொரு குற்றமும் கைது செய்யக்கூடியதாகவும் ஜாமீனில் வெளிவர முடியாததாகவும் இருக்கும் எனவும், தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் முதன்மை செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
விவரம் இப்படியிருக்க, செட்டிக்கரை ஊராட்சியில் உள்ள சுமார் 166 ஏக்கர் நிலங்களை சன்னி பிரிவை சேர்ந்த தரணி ஷா முகைதீன் என்பவர் வக்ஃப் வாரியத்துக்கு இனாமாக கொடுத்துள்ளதாக வாரியத்தின் கடிதம் கூறுகிறது.
"1863 ஆம் ஆண்டில் வக்ஃப் வாரியத்துக்கு இனாமாக அவர் கொடுத்துள்ளதாக ஆவணங்கள் கூறுகின்றன. ஆனால், 1906 ஆம் ஆண்டில் இருந்து வருவாய்த்துறை ஆவணங்களில் வக்ஃப் நிலம் என எங்கும் குறிப்பிடப்படவில்லை".
"இனாமாக வழங்கப்பட்ட நிலத்தை தரணி ஷா முகைதீனுக்கு பிறகு வந்த அவரது குடும்பத்தார் நிலங்களைப் பிரித்து விற்றிருக்கலாம். இவற்றை முறையாக ஆய்வு செய்ய வேண்டும்" எனக் கூறுகிறார், தருமபுரி மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி ஒருவர்.
இது குறித்து வட்டாட்சியர் சவுகத் அலி "செட்டிக்கரை ஊராட்சியில் பிரச்னைக்குரிய நிலங்களில் வசிக்கும் மக்களிடம் இருந்து நிலம் தொடர்பான ஆவணங்களைப் பெற்றுள்ளோம். மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது" என்கிறார்.
செட்டிக்கரை ஊராட்சி விவகாரம் தொடர்பாக போதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம், "நிலம் தொடர்பான விவரங்களை மாவட்ட ஆட்சியரிடம் கேட்டிருந்தோம். அங்கிருந்து ஆவணங்கள் பெறப்பட்டன. இதில், சுமார் 60 ஏக்கர் நிலங்கள் வக்ஃப் வாரிய சொத்துகள் அல்ல என்பது தெரியவந்துள்ளது" என கூறியிருக்கிறார்.
"அது தனிநபர்களின் சொத்து என வாரியத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலத்துக்கும் கடிதம் அனுப்ப உள்ளோம். மீதம் உள்ள சொத்துகளின் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளன" என்கிறார், நவாஸ்கனி.
"செட்டிக்கரை ஊராட்சியில் பிரச்னைக்குரிய 166 ஏக்கர் நிலங்களும் தனி நபர்களுக்கு சொந்தமானது அல்ல. சிலர் அதை விற்றிருக்கலாம்" என்கிறார் அவர்.
வக்ஃப் வாரிய ஆவணங்களில் உள்ள விவரங்களின் அடிப்படையில் பத்திரப்பதிவுக்கு தடை விதிக்குமாறு கூறியுள்ளதாகத் தெரிவித்த நவாஸ்கனி, "ஆவணங்களில் உண்மைத்தன்மை இருந்தால் அதற்கு தடையில்லா சான்று கொடுப்பதில் எந்த தயக்கமும் இல்லை. அடுத்தவர் நிலத்தை வாரிய நிலமாக உரிமை கொண்டாடுவதற்கு விருப்பம் இல்லை" என்றார்.
மேலும், "வக்ஃப் வாரிய சொத்துகள், பல்வேறு வகைகளில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தெரியவந்ததால் 2022 ஆம் ஆண்டு பத்திரப்பதிவுத் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது" "சில வகையான ஆவணங்கள் முறையாக விற்கப்பட்டது தெரியவந்தால் அவற்றை நீக்கும் பணிகளை மேற்கொள்கிறோம். அதேநேரம், முறைகேடாக விற்கப்பட்டதைக் கண்டறிந்தால் நீதிமன்ற நடவடிக்கையின் மூலம் மீட்கும் பணிகளும் நடந்து வருகின்றன" என்று ஊடகம் ஒன்றிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

admin
