சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி வேட்பாளர்! என்டிஏ கூட்டணி சார்பில் அறிவிப்பு!

சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி வேட்பாளர்! என்டிஏ கூட்டணி சார்பில் அறிவிப்பு!

நரேஷ்.என்,

  குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன்  என்டிஏ கூட்டணி சார்பில் அறிவிப்பு: 21-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்படவிருக்கிறது. அவருக்கு பிரதமர் மோடி மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  ஜெகதீப் தன்கர் விலகலுக்கு பின்னர், துணை குடியரசு தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்றைய தினம் வெளியிட்டார். இதன்மூலம் பல்வேறு விதமான விஷயங்களை சாதித்து கொள்ள பாஜக முயல்வதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

 தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த ஒருவருக்கு  துணை குடியரசு தலைவர் பதவியை வழங்குவதை காங்கிரஸ் கட்சி வழக்கமாக வைத்திருந்தது. ஆனால் பாஜக அப்படியான நடைமுறையை பின்பற்றவில்லை. இதுபற்றி விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

   வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்திற்கு பாஜக பெரிதும் முக்கியத்துவம் அளித்திருக்கிறது என்பதை சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வின் மூலம் உணர்த்தி இருக்கிறது.

தமிழர்களையும், தமிழகத்தையும் பாஜக புறக்கணிப்பதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் துணை குடியரசு தலைவர் தேர்வு நடைபெற்றுள்ளது.

   தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணிக்கு மிகவும் சாதகமான மண்டலம் கொங்கு மண்டலம். இங்கிருந்து வந்த அண்ணாமலை பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். ஆனால் 2026 தேர்தலை கருத்தில் கொண்டு எடப்பாடி பழனிசாமி கொடுத்த அழுத்தத்தால் அண்ணாமலை மாற்றப்பட்டு, அவரது இடத்தில் நயினார் நாகேந்திரன் அமர வைக்கப்பட்டார். இது கோவை மண்டல பாஜகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

  இதனை சமாளிக்கும் வகையில் அதே கோவையில் இருந்து சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

  தமிழகத்தில் அண்ணாமலை வருகைக்கு பின்னர் பாஜகவில் மூத்தவர்களுக்கு மதிப்பில்லை என்ற விமர்சனங்கள் கட்சிக்குள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் உயர்பதவி கண்டிப்பாக வரும் என்பதற்கு  இது சான்றாம்.

   இந்நிலையில் இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் பதிவில் வாழ்த்து தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

  அதில்  திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், தனது அர்ப்பணிப்பு, பணிவு மற்றும் அறிவுத்திறனால் பொது வாழ்வில் நீண்ட காலம் தன்னை வேறுபடுத்திக் காட்டியுள்ளார். தாம் வகித்த பல்வேறு பதவிகளின் போது, சமூக சேவை மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அவர் எப்போதும் கவனம் செலுத்தியுள்ளார். தமிழ்நாட்டில்  அடிமட்ட  நிலையில் அவர் விரிவான பணிகளை மேற்கொண்டுள்ளார். எங்கள் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அவரை பரிந்துரைக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி குடும்பம் முடிவு செய்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என தெரிவித்துள்ளார்.

   அதே போல் தமிழ்நாடு எதிர்கட்சித்தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிசிபிஆருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.