மதுரை விஏஓ உதவியாளரின் ரூ.67.25 கோடி சொத்து! விசாரிக்கும் போலீஸ்!
அ.கார்த்தீஸ்வரன்,
கிராம உதவியாளா பாண்டி என்பவர் தனது வருமானத்தை மீறி ரூ.67.25 கோடிக்கு சொத்து சேர்த்ததாக லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்ட செக்கானூரணியைச் சேர்ந்தவர் பாண்டி 58. திருமங்கலம் தாலுகா கே.புளியங்குளம் கிராம உதவியாளராக உள்ளார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது.
இதுகுறித்து விசாரித்த போலீசார், ஆவணங்களின் அடிப்படையில் ரூ.67.25 கோடிக்கு சொத்து சேர்த்ததை உறுதிசெய்து வழக்குப்பதிவு செய்தனர்.
2018 முதல் 2023 மார்ச் வரை மதுரை திருமங்கலம் தாலுகா ஏ.கொக்குளத்தில் பாண்டி, கிராம உதவியாளராக பணிபுரிந்தார். மாதச்சம்பளத்தை தாண்டி தனது பெயரிலும், மனைவி ராணி, மகன்கள் பெயர்களிலும் சொத்து சேர்த்துள்ளார்.
மூத்த மகன் பிரபாகர், தனியார் வங்கி ஊழியர். இவரது மனைவி மாளவிகா. உடல்நலக்குறைவால் பிரபாகர் இறந்ததை தொடர்ந்து, இரண்டாவது மகன் பிரகாஷூற்கு மாளவிகாவை திருமணம் செய்து வைத்தனர்.
அப்படியிருக்க மாளவிகா குடும்ப பிரச்னையில் தற்கொலை செய்து கொண்டார். பிரகாஷூம் கடந்தாண்டு ஜூன் 23ல் இறந்தார். இரு மகன்களின் பெயரிலும் சொத்துகள் இருக்கின்றன. இதன்அடிப்படையில் பாண்டி வருமானத்திற்கு மீறி மொத்தம் ரூ.67 கோடியே 25 லட்சத்து 634 மதிப்புள்ள சொத்து சேர்த்துள்ளார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், ''இச்சொத்துகள் பெரும்பாலானவை மனைவி தரப்பில் இருந்து தரப்பட்டதாக பாண்டி கூறுகிறார். சொத்துக்கள் கைமாறி போகாமல் இருக்கவே மாளவிகாவை இளைய மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளதாக தெரிகிறது, இருப்பினும் விசாரித்து வருகிறோம் என்கிறார்கள்.

admin
