ஜெயலலிதாவை இழிவுபடுத்திய கடம்பூர் ராஜூவை கண்டிங்க எடப்பாடியாரே! விசிக பிலிப் குரல்!

ஜெயலலிதாவை இழிவுபடுத்திய கடம்பூர் ராஜூவை கண்டிங்க எடப்பாடியாரே! விசிக பிலிப் குரல்!

ம.பா.கெஜராஜ்,

 ஜெயலலிதாவை விமர்சனம் செய்த தன் சகாவான கடம்பூர் ராஜூ மீது எடப்பாடி பழனிச்சாமி பாயவில்லை, ஆனால் திருமாவளவன் மீது பாய்ச்சல் காட்டுவதா என்று விசிகவினர் பொங்குகின்றனர்.

 இது குறித்த விவரம் வருமாறு, எம்ஜிஆர் பற்றி பேசிய பலர் காணாமல் போய்விட்டனர் என்றும் திருமாவளவனுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

 மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். குறித்து திருமாவளவன் சர்ச்சையான வகையில் பேசி இருந்தார். இதற்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், எம்ஜிஆர்-ஐ விமர்சித்தவர்கள் காணாமல் போய்விட்டதாக திருமாவளவனை குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார்.

 விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எம்.ஜி.ஆர் குறித்து கடுமையான கருத்துகளை தற்போது வெளியிட்டுள்ளார். அம்பத்தூரில் நடைபெற்ற கலைஞர் கருணாநிதி நினைவு நாள் நிகழ்வில் பேசிய அவர், "இன்றைய அரசியல் சூழலில் தமிழ் தேசியத்தை பேசுபவர்கள், பெரும்பாலும் கலைஞர் கருணாநிதியை மட்டும் விமர்சிக்கிறார்கள்.

   ஆனால் எம்.ஜி.ஆர் மீதோ அல்லது கலைஞரின் ஆசான் அண்ணா மீதோ விமர்சனங்கள் அதிகம் இல்லை. கடந்த 50 ஆண்டுகளாக 'கலைஞர் எதிர்ப்பு' அரசியல் தமிழ்நாட்டில் நிலவுகிறது. இந்த 'கலைஞர் எதிர்ப்பு' என்ற தொற்றுநோய் எங்களுக்கும் இருந்தது. ஆனால் கலைஞரின் ஆளுமை, ஆற்றலை பற்றி பேச விரும்பாத சூழல் நிலவுகிறது".

 மேலும், "எம்.ஜி.ஆர், கலைஞருக்கு எதிராக விமர்சனம் செய்து, வெறுப்பு அரசியலை விதைத்தார். ஒரு பார்ப்பனிய பெண் திராவிட இயக்கத்தின் தலைவராக வர வழி வகுத்தார். அந்த வகையில், திராவிட இயக்கத்தில் பார்ப்பனியத்தை ஊடுருவச் செய்தவர் எம்.ஜி.ஆர் என்ற விமர்சனம் உள்ளது" என்று தெரிவித்தார்.

 இதற்கு அதிமுக தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இதற்கிடையே திருமாவளவனுக்கு அதிமுக பொதுக் செயலாளர் எடப்பா பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

 எடப்பாடி பழனிசாமி நிரூபர்கள் சந்திப்பின்போது," எங்கள் தலைவர் எம்ஜிஆர் பற்றி விசிக தலைவர் திருமாவளவன் பேசியது தவறு. அவருக்கு ஒன்றும் தெரியாது. எம்ஜிஆர் பற்றி பேசியவர்கள் காணாமல் போய்விட்டனா?" என்று சொன்னார்.

 இதற்கு விசிக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது. வேலூர் மாநகர மாவட்ட விசிக செயலாளர் வேலூர் பிலிப் இதுபற்றி கூறுகையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் கோவில்பட்டியில் ஒரு கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில், 1999 ஆம் ஆண்டு பாஜக ஆட்சியை கவிழ்த்து அம்மா வரலாற்று பிழை செய்து விட்டார் என்று ஜெயலலிதா செய்தது தவறு என்கிற வகையில் பேசியிருந்தார்.

 கடம்பூர் ராஜூவுக்கு முகவரி கொடுத்தவரையே அப்படி இழிவாக பேசியதற்காக எடப்பாடி பழனிச்சாமி வாயைத் திறக்கவில்லை. மாறாக தலைவர் திருமா அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று பேசியிருப்பது கண்டிக்கத்தகது.

 பாஜகவுடன் கூட்டு வைத்தது நான் செய்த தவறு என்று ஜெயலலிதா மனவருத்தம் அடைந்து அன்றைய காலகட்டத்தில் பேசிய நிலையில், பாஜக உறவை முறித்தது பிழை என்று இந்த அரைவேக்காடு பேசியதை முதலில் எடப்பாடி கண்டிக்க வேண்டும் என்று சொன்னார்.