பெத்த பொண்ணுக்கு கல்யாணம் செய்தது போல மகிழ்ந்தேன்! சுற்றுலா ஏரியை அர்பணித்து அமைச்சர் துரைமுருகன் உருக்கம்!

பெத்த பொண்ணுக்கு கல்யாணம் செய்தது போல மகிழ்ந்தேன்! சுற்றுலா ஏரியை அர்பணித்து அமைச்சர் துரைமுருகன் உருக்கம்!

ஜி.கே.சேகரன்,

 நான் பெத்த பொண்ணுக்கு கல்யாணம் ஆனால் எப்படி மகிழ்ச்சி அடைவேனோ அப்படி மகிழ்ச்சி அடைந்தேன், தேர்தலுக்கு முன் அனைக்கட்டிலும், பேர்ணாம்பட்டிலும்  டேம் கொண்டு வருவேன் அமைச்சர் துரைமுருகன் பேச்சு.

 வேலூர் மாவட்டம், காட்பாடி கழிஞ்சூர், தாராபடவேடு ஏரிகளை இணைத்து 6.2 கிலோ மீட்டர் நடைபாதை, படகு குழாம், செயற்கை மண் திட்டுக்கள் அமைத்து ரூ.36.59 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா தளமாக்கப்பட்டிருக்கிறது.

 அதனை பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா மற்றும் ரூ.20.90 கோடி மதிப்பீட்டில் காட்பாடி நகரில் 3 வெள்ள தடுப்பு பணிகள், கழிஞ்சூர் ஏரியின் உபரி நீர்  கால்வாயின் தரைப்பாலம் பணிக்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில்   நடைபெற்றது.

 இதில் சிறப்பு  விருந்தினராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு சுற்றுலா தளத்தை பொதுமக்களுக்கு அர்ப்பணித்தும், நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், மேயர் சுஜாதா,துணை மேயர் சுனில் சட்டமன்ற உறுப்பினர் அமுலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 இவ்விழாவில் அமைச்சர் துரைமுருகன், குறை கூற முடியாத அளவுக்கு காட்பாடி தொகுதிக்கு எல்லாவற்றையையும் செய்துள்ளதாக கூறினார்.

 இந்த இரண்டு ஏரியில் கலைஞர் முதல்வராக இருந்த போது மருத்துவக்கல்லூரி கட்ட முடிவு செய்தோம் .இறுதியில் ஆட்சி மாற்றம் வந்துவிட்டது. பின்னர் அதிமுக ஆட்சியில் மருத்துவக்கல்லூரி வேறு இடத்துக்கு போய்விட்டது.

 பிறகு இந்த ஏரியை மக்கள் பயன்படும் வகையில்  செயல்படுத்த வேண்டும் என நினைத்தேன். அதற்கான காலம் வந்தது தற்போது சுற்றுலா தளமாக மாற்றியுள்ளேன்.யாரும் அசுத்தம் செய்யாமல் காப்பாற்ற வேண்டியது மக்களின் பொறுப்பு.

  சீராக வைத்திருப்பீர்களோ  சீரழிப்பீர்களோ  என்பது உங்கள் பொறுப்பு. விரைவில் இந்த இரண்டு ஏரியிலும் படகு சவாரி துவங்கப்படும்.

  அனைக்கட்டில் மேல் அரசம் பட்டு அணை பேர்ணாம்பட்டில் பத்தல பள்ளி அணை இரண்டையும் தேர்தலுக்குள் கொண்டு வருவேன். குடியாத்தம் மேர்தாணா அணை சுற்றுலா தளமாக மேம்படுத்த நிதி ஒதுக்கியுள்ளேன்.

  வேலூர் பின்தங்கிய மாவட்டமாக இருந்தது அதை மாற்றியுள்ளேன். காட்பாடி அருகே மற்றும் மகி மண்டலம் ஆகிய இரண்டு இடங்களில் இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக சிப்காட் கொண்டுவர அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

 குறை கூற முடியாத அளவுக்கு காட்பாடி தொகுதிக்கு எல்லாவற்றையையும் செய்துள்ளேன். இந்த ஏரியை சுற்றுலா தளமாக மாற்றி திறந்து வைத்ததை, நான் பெத்த பொண்ணுக்கு கல்யாணம் ஆனால் எப்படி மகிழ்ச்சி அடைவேனோ அப்படி மகிழ்ச்சி அடைந்தேன் எனஅமைச்சர் துரைமுருகன் பேசினார்.