மருத்துவம் மற்றும் பொறியியலை தமிழில் கற்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! உள்துறை அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள்!

மருத்துவம் மற்றும் பொறியியலை தமிழில் கற்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! உள்துறை அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள்!

கு.அசோக்,

  தமிழிலும் மருத்துவம் பொறியியலை கற்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் அரக்கோணம் சி.ஐஎஸ் எப் 56 ஆம் ஆண்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

 இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் பகுதியில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.

 இந்த பயிற்சி மையத்தில் இந்தியா முழுவதிலும் உள்ள மாநிலங்களில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு இந்தியாவின் முக்கிய பகுதிகளான அணு மின் நிலையம், உயர்நீதிமன்றம்,   முக்கிய சின்னங்கள், விண்வெளி மையம், ஆய்வகங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

 இந்நிலையில் கடந்த பிப்ரவரி 24 தேதி அதிகாரப்பூர்வமாக ராஜாத்திய சோழன் என அரக்கோணம் (சிஐஎஸ்எப்) மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பயிற்சி மையத்தின் பெயர் மாற்றப்பட்டது. இதன் 56 ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுவதால் சி ஐ எஸ் எப் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

  இந்த 56 ஆண்டு தொடக்க  நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துக் கொண்டார். அப்போது அவருக்கு முதலாவதாக சிவப்பு கும்பல் வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், தொடர்ந்து  சி ஐ எஸ் எப் படை பிரிவின்  தலைவர் வீர வாலுடன் வீர வணக்கம் செய்தார்.

  பின்னர் உள்துறை அமைச்சர் அமைச்சர் அமித்ஷா, மற்றும் சி ஐ எஸ் எப் டிஜி ராஜ்விந்தர் சிங் ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்று வீரர்களின் படை பிரிவினை பார்வையிட்டனர். அதனைதொடர்ந்து படை வீரர்களின் அணிவகுப்பு வீர வணக்கத்தை ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா,

  மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 56வது எழுச்சி தின விழா கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். வரலாற்று சிறப்புமிக்க தமிழ்நாட்டில் இந்த விழாவை கொண்டாடுவது சிறப்புக்குரியதாகும். நாட்டின் பாதுகாப்பு பணிகளில் சிஐ எஸ் எப் வீரர்களின் பங்கு மிக முக்கியமானது.

  இவர்கள் அமைதியான முறையில் பாதுகாப்பு பணியை சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். வரும் 2027 ஆம் ஆண்டுக்குள்  உலகின் மூன்றாவது இடத்தில் நாட்டின் பாதுகாப்பு படை இருக்கும் அளவிற்கு நடவடிக்கைகளை மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார். சி ஐ எஸ் எப் பாதுகாப்பு பணியில் மட்டும் இன்றி, வீரர்கள் சிலர் சமூக சேவையிலும் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

  மெட்ரோ, விமான நிலையம், அணுமின் நிலையம், நாட்டின் முக்கிய நினைவுச் சின்னங்கள் உட்பட பல்வேறு இடங்களில் சி ஐ எஸ் எஃப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோக வரும் ஆண்டில் இன்னும் பல்வேறு இடங்களில் இவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  வீரர்கள் பாதுகாப்பு பணியின் போது இதுவரை 127 பேர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

  நாடு முழுவதும் 14 ஆயிரம் சி ஐ எஸ் எப் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது போக மற்ற பாதுகாப்பு பணியின் துறைகளுக்காக ஒரு லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்திலேயே தேர்வு எழுதி வந்திருந்தனர்.

 ¢ இத்தேர்வுக்கு வரும் காலங்களில் தமிழ் மற்றும் பெங்கால் மொழியில் இத்தேர்வுகள் எழுத மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுபோல தமிழக அரசும் மாணவர்களின் நலன் கருதி பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளை தமிழில் கற்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

  முன்னதாக சி ஐ எஸ் எப் படையில் ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் சிறப்பாக பணியாற்றியவர்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் மெடல்களை வழங்கினார்.

   மேலும் 56வது எழுச்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு மலரை வெளியிட்டார். தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள ஆறு இடங்களில் மருத்துவமனை மற்றும் சிறப்பு வளாகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை திறந்து வைத்து கொல்கத்தா, நொய்டா, சிவகங்கை, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் ரூ.87.69 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்ட உள்ள கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

  மேலும் சி ஐ எஸ் எப் எழுச்சி தின விழாவை முன்னிட்டு வீரர்களின் பணிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்தும் வகையில் குஜராத்தில் சைக்கிள் மாரத்தான் விழிப்புணர் பேரணியை காணொளி மூலம் தொடங்கி வைத்தார்.

  இந்த நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

 நிகழ்ச்சி இறுதியாக சி ஐ எஸ் எப் படைவீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.