அமித்ஷாவுக்கு பதில் அவரைப்போல உள்ள சினிமா சந்தான பாரதி போஸ்டர்! தில்லாலங்கடியை செய்தது யார் என புகார்?

கு.அசோக்,
இராணிப்பேட்டையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகைக்கு அவரின் புகைப்படத்திற்கு பதிலாக நடிகர் சந்தான பாரதியின் படத்தை போஸ்டரில் இடம்பெற செய்ததால் பரபரப்பு - இதற்கும் பாஜகவுக்கும் சம்பந்தமில்லை என காவல் கண்காணிப்பாளரிடம் புகார்.
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தக்கோலம் பகுதியிலுள்ள மத்திய தொழிற் பாதுகாப்பு படை மையத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தந்தார். இதனை ஒட்டி மாவட்டம் முழுவதும் அமித்ஷாவை வரவேற்கும் விதமாக போஸ்டர்கள் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இராணிப்பேட்டையில் ஒட்டப்பட்ட ஒரு போஸ்டரில் அமித்ஷாவை வரவேற்கும் விதமாக அவரது புகைப்படம் இல்லாமல் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகருமான சந்தான பாரதியின் புகைப்படம் (உருவ ஒற்றுமை) இடம் பெற்றிருந்தது.
இந்த போஸ்டரை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அருள்மொழி ஒட்டியதாக அவரது பெயரும் போஸ்டரில் இடம் பெற்றிருக்கவே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலானது.
இது தொடர்பாக அருள்மொழி வெளியிட்டுள்ள வீடியோவில் தனக்கும் அந்த போஸ்டருக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்றும், தனது பெயரையும் மத்திய உள்துறை அமைச்சர் அமைச்சரின் பெயரையும் கெடுக்கும் விதமாக யாரோ திட்டமிட்டு இந்த செயலில் ஈடுபட்டு ஈடுபட்டுள்ளதாகவும் இதுகுறித்து ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.