கர்நாடகாவில் ஹிஜாப் பாலிடிக்ஸ்! ரத்து செய்த காங்கிரஸ் அரசு! கொதித்து எழும் பாஜக!!

ம.பா.கெஜராஜ்
கர்நாடகவில் ஹிஜாப் அணிவதற்கு கடந்த ஆட்சியில் தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அம்மாநில முதல்வர் அந்த தடையை ரத்து செய்திருக்கிறார்.
கர்நாடாக மாநிலத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உடுப்பி அரசு கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அனுமதி மறுக்கப்பட்டது. அப்போதைய பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை, கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்தார். இதற்கு எதிராக போராட்டங்கள் வெடித்தது. ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப் தடை செல்லும் என உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் 18-ல் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்தனர்.
ஒரு நீதிபதி, உயர் நீதிமன்ற தீர்ப்பு செல்லும் எனவும், மற்றொரு நீதிபதி செல்லாது எனவும் தீர்ப்பளித்தனர். பின்னர் நீதிமன்ற அமர்வு இவ்வழக்கை பெரிய அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வேண்டுகோள் விடுத்த நிலையில் இந்த பிரச்சனை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இன்னமும் உள்ளது.
இந்நிலையில் தான் ஹிஜாப்புக்காக விதிக்கப்பட்ட தடையை சித்தராமையா நீக்கியிருக்கிறார். அதோடுமட்டுமில்லாமல் சித்தராமையா வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், "பிரதமர் மோடி 'சப் கா சாத் சப் கா விகாஸ்' என்று கூறுவது ஏமாற்று வேலை. பாஜக வேலை, ஆடை, சாதி அடிப்படையில் மக்களையும் சமூகத்தையும் பிரிக்கும் பணியைச் செய்கிறது. ஹிஜாப் தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று கூறியுள்ளேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பாஜகவை சேர்ந்தவர்கள் கடுமையாக பதிலலித்து வருகிறார்கள்.
முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறுகையில், "ஹிஜாப் தடை உத்தரவை நீக்கச் செ?ல்லி யாரும் கோரிக்கை விடுக்கவில்லை. முஸ்லிம்களை திருப்திப்படுத்துவதற்காக சித்தராமையா இவ்வாறு தெரிவித்துள்ளார். தனது அறிக்கையை அவர் திரும்ப பெற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். அதே போல் எடியூரப்பாவின் மகனும் கர்நாடகா பாஜக தலைவருமான விஜயேந்திரா, "கல்வி நிறுவனங்களில் இருந்த ஹிஜாப் தடை நீக்கும் உத்தரவு எங்களது கல்வி நிறுவனங்களில் இருக்கும் மதச்சார்பின்மை குறித்த கவலையை அதிகரித்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
அம்மாநில முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, "முதல்வர் சித்தராமையா வரும் 2024 மக்களவைத் தேர்தலில் சிறுபான்மையினர் வாக்குகளை பெறுவதற்காக வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுகிறார். "எல்லா இடங்களிலும் ஹிஜாப் அணியப்படுகிறது. அது ஆடை குறித்த பிரச்சினை. சித்தராமையா பள்ளி, கல்லூரி மாணவிகளிடம் வித்தியாசத்தை உருவாக்க முயற்சிக்கிறார். வாக்கு வங்கி அரசியலுக்காக இதனைச் செய்கிறார். இந்த விவகாரம் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில், முதல்வர் இதனை கண்டுகொள்ளவில்லை. மக்களவைத் தேர்தலுக்காக அவர் சிறுபான்மையினரை திருப்திப்படுத்த விரும்புகிறார்" என்று கூறியிருக்கிறார்.
மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவிக்கையில் கர்நாடகாவில் ஹிஜாப் தடையை நீக்கும் உத்தரவு மாநிலத்தில் 'ஷரியத் சட்டத்தை' அமல்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும், எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் இஸ்லாமிய சட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இது வெறும் ஹிஜாப் தடையை நீக்கும் உத்தரவு மட்டும் இல்லை, மாறாக மாநிலத்தில் ஷரியத் சட்டத்தை நிறுவுவதற்கான முன் முயற்சியாகும்.ராகுல் காந்தி, காங்கிரஸ், இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்தால் பின்னர் இங்கு இஸ்லாமிய சட்டம் அமல்படுத்தப்படும். இது சனாதன தர்மத்தை அழிக்க திட்டமிட்டு செய்யப்பட்ட சதி" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி பாஜகவின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் அரசு, 'சட்டத்துக்கு உட்பட்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையை அரசியலாக்கக் கூடாது' என்று வலியுறுத்தியுள்ளது. மாநில அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகனுமான பிரயங்க் கார்கே கூறுகையில், "பாஜகவுக்கு அரசியல் சாசனம் குறித்து தெரியுமா என்பது எனக்கு தெரியவில்லை. அவர்கள் அரசியலமைப்பு சட்டங்களை படிக்க வேண்டும். கர்நாடகாவின் வளர்ச்சிக்கு பாதகமான சட்டங்கள், கொள்கைகள் கவனிக்கப்படாது. தேவைப்பட்டால் அவை நீக்கப்படும்" என்று சொல்லியிருக்கிறார்.