ஒரு வாரமாக அகற்றப்படாத குப்பைகள்! கொசுக்கள் உற்பத்தி, கழிவுநீர் அடைப்பு, தெருநாய்கள் அட்டகாசம் – வாலாஜா மக்கள் அவதி!

ஒரு வாரமாக அகற்றப்படாத குப்பைகள்! கொசுக்கள் உற்பத்தி, கழிவுநீர் அடைப்பு, தெருநாய்கள் அட்டகாசம் – வாலாஜா மக்கள் அவதி!

செய்தி: கு. அசோக்,
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா நகராட்சிக்கு உட்பட்ட 21-வது வார்டு காமராஜர் தெருவில் கடந்த ஒரு வாரமாக குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கிக் கிடப்பதால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தற்போது மழைக்காலம் நிலவி வரும் நிலையில், சாலையோரங்களில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவும் அச்சம் பொதுமக்களிடையே நிலவி வருகிறது.

மேலும், கழிவுநீர் கால்வாய்களில் குப்பைகள் அடைத்துக் கொள்வதால் வீடுகளின் கழிவறைகளில் கழிவுநீர் பின்வாங்கும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சாலைகளில் சிதறிக் கிடக்கும் குப்பைகளை மாடுகள் உண்பதால் அவற்றின் உடல்நலத்திற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

அதேபோல் குப்பைகளில் கிடக்கும் உணவுக் கழிவுகளை உண்பதற்காக தெருநாய்கள் ஒன்றுடன் ஒன்று ஆக்ரோஷமாகச் சண்டையிடுவதால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர்.

ஒரு வாரமாகியும் குப்பைகளை முறையாக அகற்றாத நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் அப்பகுதியின் சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, வாலாஜா நகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு காமராஜர் தெருவில் தேங்கியுள்ள குப்பைகளை முழுமையாக அகற்றுவதுடன், கழிவுநீர் கால்வாய்களைச் சீரமைத்து கொசு ஒழிப்பு மற்றும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நோய்கள் பரவிய பின்னர் நடவடிக்கை எடுப்பதைவிட, முன்னெச்சரிக்கையாகத் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதே நகராட்சி நிர்வாகத்தின் கடமையாகும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.