இராணிப்பேட்டையில் 72,878 பயனாளிகளுக்கு ரூ.296.46 கோடி நலதிட்ட உதவி வழங்கிய துணை முதல்வர்! 12,000 பேருக்கு வீட்டுமனைபட்டா!
கு.அசோக்,
மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவிற்கே எடுத்துக்காட்டு மாநிலமாக தமிழகம் திகழ்கிறது - அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்-கடுமையான நிதி நெருக்கடி சூழலிலும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மகளிர் உரிமைத் திட்டத்தை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
இராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் சமத்துவபுரம் எதிரே பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், 72,878 பயனாளிகளுக்கு ரூ.296.46 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும் 24.34 கோடி மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதோடு, ஏற்கெனவே ரூ.42.17 கோடி மதிப்பீட்டில் நிறைவடைந்துள்ள திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். முன்னதாக ராணிப்பேட்டை நகராட்சி வளாகத்தில் கர்மவீரர் காமராஜர் தங்கிய இல்லத்தினை புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில் அதனை மக்கள் பார்வையிட திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு, வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ராணிப்பேட்டை நகரமானது ராணியின் பெயரில் உள்ளது. இந்த விழாவில் ராஜாக்களை விட ராணிக்கள் தான் அதிகம் பங்கேற்றுள்ளனர். ராணிகளுக்கான விழாவாக அமைச்சர் ஆர்.காந்தி இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளார்.
திராவிட மாடல் அரசு மகளிருக்கான அரசு, பெண்கள் முன்னேற்றத்திற்கான அரசு, பொருளாதாரத்தில் பெண்கள் உயர வேண்டும் என பல திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருபவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என புகழாரம் சூட்டினார்.
மகளிர் விடியல் பயணம் திட்டம் மூலம் தமிழகத்தில் 820 கோடி பயணங்கள் மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம் மாதத்திற்கு ரூ.900 முதல் ரூ1000 வரை பெண்கள் சேமிக்கின்றனர். இராணிப்பேட்டையில் மட்டும் 8 கோடி விடியல் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டம் செயல்படுத்தி வருவதாகவும், அதன் மூலம் தமிழகத்தில் 8 லட்சம் மாணவ மாணவிகள் பயன் பெற்றுள்ளனர். ராணிப்பேட்டையில் 16,000 மாணவ- மாணவிகள் பயன் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

காலை உணவு திட்டம் மூலம் தமிழகத்தில் 22 லட்சம் குழந்தைகள் பயனடைந்துள்ளனர். இராணிப்பேட்டையில் 25,000 பேர் பயன்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.தேர்தல் வாக்குறுதியில் கூறிய கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை கடும் நிதி நெருக்கடியிலும் வழங்கியது திராவிட மாடல் அரசு. இதுவரையில் தமிழகத்தில் கடந்த 26 மாதங்களில் 1.20 லட்சம் மகளிருக்கு தமிழக உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இராணிப்பேட்டை மாவட்டத்தில் 1 லட்சத்து 70 ஆயிரம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு டிசம்பர் முதல் விடுபட்ட மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவிலியேயே எடுத்துக்காட்டு மாநிலமாக தமிழகம் திகழ்வதாக தெரிவித்த அவர், இந்தியாவிலேயே வேறு மாநிலங்களில் இல்லாத வகையில் சுய உதவிக்குழுக்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
இது அடையாள அட்டை அல்ல, மகளிரின் அடையாளத்தை மாற்றும் அட்டை என பேசினார். மேலும் தமிழகம் முழுவதும் 19 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இராணிப்பேட்டையில் 12,000 பயனாளிகளுக்கு பட்டா வழங்க உள்ளதாக தெரிவித்தார். அன்புகரங்கள் பயனாளிகளுக்கு எப்போதும் திராவிட மாடல் அரசு துணை நிற்கும். விளையாட்டு துறையில் கவனம் செலுத்துங்கள் என கூறிய அவர், தமிழகத்தை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்ல நாங்கள் தயாராக உள்ளோம், மக்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறி உரையை நிறைவு செய்தார்.

admin
