குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்காமல் திமுகவினரே பகிர்ந்து கொண்டனர்! பகீர் புகார் சொன்ன வியாபாரிகள்!
ஜி.கே.சேகரன்,
திறந்தவெளி தரைக்கடைகளை குலுக்கல் முறையில் ஒதுக்காமல் திமுகவினரே பகிர்ந்து எடுத்துக் கொண்டதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு எழுப்பியதுடன் ஆட்சியரிடம் மனு அளித்திருக்கிறார்கள்.
வேலூர் பழைய மீன் மார்க்கெட் வளாகம் போதிய இடவசதி இல்லாததால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்டது. அங்கிருந்த கடைகளுக்கு மாற்றாக மக்கான் பகுதியில் கூடுதல் வசதிகளுடன் கூடிய மீன் மார்க்கெட் வளாகம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இதையடுத்து, பழைய மீன் மார்க்கெட் வளாகம் இடித்து அகற்றப்பட்ட நிலையில் அந்த இடத்தின் மூலம் மாநகராட்சிக்கு வருமானம் ஈட்டும் வழிவகை ஆய்வு செய்யப்பட்டது.
இதற்கிடையில், வேலூர் கிருபானந்த வாரியார் சாலையில் பொதுமக்களுக்கும், போக்கு வரத்துக்கும் இடைஞ்சலாக இருக்கும் தரைக்கடை வியாபாரி களுக்கு கடைகள் கட்டிக் கொடுக்க முடிவானது.
அதன்படி, கடந்த 2015-16-ம் நிதியாண்டில் மாநகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.82.90 லட்சத்தில் திறந்தவெளி மேடை கடைகள் அமைக்கப்பட்டன.
6 அடி நீளமும், 3 அடி அகலமும் கொண்டதாக ஒவ்வொரு கடைகள் வீதம் சுமார் 250 கடைகள் கட்டப்பட்டன. கடைகள் அனைத்தும் டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டு தகர மேற்கடைகள் அமைக்கப்பட்டன.
வியாபாரிகளுக்காக கழிப்பறை வசதியும் ஏற்படுத்தப்பட்டன.மேலும், கிருபானந்த வாரியார் சாலையில் உள்ள தரைக்கடைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அவர்களுக்கு உரிய கடைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இதன்மூலம், கிருபானந்த வாரியார் சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், திறந்தவெளி மேடை கடைகள் செயல்பட்ட ஓரிரு நாளிலேயே மீண்டும் அவர்கள் கிருபானந்த வாரியார் சாலையிலேயே வியாபாரம் செய்ய தொடங்கினர்.

திறந்தவெளி மேடை கடையில் வியாபாரம் நடைபெறவில்லை என்ற காரணங்களை கூறி வெளியேறிய அவர்களை எவ்வளவு முயற்சித்தும் அங்கு செல்ல மறுத்தனர்.
ஏறக்குறைய 7 ஆண்டுகளுக்கும் மேலாக பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் உள்ள திறந்தவெளி மேடை கடைகள் பயன்பாட்டில் இல்லாமல் சேதமடைந்து வந்த நிலையில், மீண்டும் கடைகள் புதுப்பிக்கப்பட்டு மாநகராட்சி மூலம் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டது.
7 ஆண்டுகளுக்கு முன்பு கடைகள் ஒதுக்கப்பட்ட போதும் சில வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்படவில்லை. இப்போதும் அவர்களுக்கு கடைகள் ஒதுக்கப்படவில்லை. இதனால் அவர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இந்நிலையில், கடைகள் அனைத்தையும் திமுகவினர் பங்கிட்டு எடுத்துக் கொண்டனர். எங்களுக்கு கடைகள் கொடுக்கவில்லை இது குறித்து கேள்வி எழுப்பும்போது காவல்துறையினர் வைத்து எங்களை மிரட்டுகிறார்கள் மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு குலுக்கல் முறையில் கடைகளை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

admin
