ஓநாயும் வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி!

ஓநாயும் வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி!

 ம.பா.கெஜராஜ்,  

ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

 அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவிக்கு ஏற்பட்ட பூகம்பத்தால் கட்சியில் பிளவு ஏற்பட்டு ஓபிஎஸ் - இபிஎஸ் என இரு தரப்பினராக பிரிந்து பின்னர் வழக்குகள், பொதுக்குழு தீர்மானம், கட்சி தலைமை அலுவலகம் என அனைத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக அமைந்ததால் ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

  அவரை துரோகி என கூறி வழியனுப்பிவைத்தனர். 

  இருந்தாலும் கூட அனைவரும் கட்சியில் ஒன்றிணைய வேண்டும் என எடப்பாடிக்கு பல வழிகளில் நெருக்கடி அளித்து வருகிறார். அதேபோல், சசிகலா ஆதரவாளர்களோ அதிமுகவிற்கு மீண்டும் சசிகலாவே தலைமையேற்க வேண்டும் என போஸ்டர் யுத்தம் வருகின்றனர்.

   அதிமுகவில் இருந்து பிரிந்து அமமுக என்ற தனிக்கட்சியை தொடங்கிய டிடிவி தினகரன், அதிமுகவை எடப்பாடி கைப்பற்றியதால் "துரோகி" என கடுமையாக விமர்சித்து வருகிறார்.

  மேலும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சிக்கு செல்லாமல் தவிர்த்தது எல்லாம் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

 அப்படியிருக்க ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளையொட்டி எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க முடியாது என்பதை சூசகமாக தெரிவிக்கும் வகையில் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

''இன்றைக்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், கொள்கை வீரர்களின் கூடாரமாகத் திகழ்கிறது. பதவிக்காகவும், பணம் சேர்ப்பதற்காகவும் கழகத்தைக் காட்டிக் கொடுக்கத் தயாராகி இருந்த திரைமறைவு அரசியல் பேராசைக்காரர்களின் கனவுகளும், கற்பனைகளும் காகித ஓடம் போல் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா? களைகளும், பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா? விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? அதிமுக தலைமையிலான சிறப்புமிக்க வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது. ஜெயலலிதாவின் சூளுரையை செயல்படுத்தி அதிமுக ஆட்சியை மலரச் செய்வோம். வியத்தக்க வெற்றிகளை நாம் பெறப்போகிறோம். அதற்கு ஏற்ப அயராது உழைப்போம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

 இந்த கடிதத்தை பார்த்த அதிமுக தொண்டர்கள் யார்தான் துரோகி என்று குழம்பி போய் உள்ளார்கள்!