மூன்றாக பிரிக்கப்படும் சென்னை காவல்துறை!

மூன்றாக பிரிக்கப்படும் சென்னை காவல்துறை!

G.S.Mathew raj,

இன்று நடைபெற்ற காவல் துறை தொடர்பான மான்ய கோரிக்கையில், சென்னை காவல் ஆணையரகம் தவிர தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்கள் உருவாக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 சென்னை காவல் ஆணையரகம் தமிழகத்தில் உள்ள காவல் ஆணையரகத்தில் மிகப்பெரிய ஆணையரகம் என்பது அறிந்ததே, இங்கு ஏ.டி.ஜி.பி., மற்றும்  டிஜிபி, அந்தஸ்து உள்ள அதிகாரிகள் காவல் ஆணையராக பதவி வகித்து வருகின்றனர்.

 தற்போது ஆணையராக உள்ள சங்கர் ஜுவால் ஏ.டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ளவர் ஆவார்.

  இந்நிலையில் சென்னை மாநகரக ஆணையரகத்தின் டிரி எப்படி உள்ளது என்பதைப் பற்றி பார்ப்போம்.

  ஆணையருக்கு அடுத்து சட்டம் ஒழுங்குக்கு மட்டும் இரண்டு ஐஜி அந்தஸ்து அதிகாரிகள் உள்ளனர். அதில் சட்டம் ஒழுங்குக்காக கூடுதல் ஆணையர்களாக (வடக்கு-மேற்கு) (தெற்கு-கிழக்கு) உள்ளனர்.

  அவர்களுக்கு அடுத்தபடியாக டிஐஜி அந்தஸ்தில் 4 இணை ஆணையர்கள் இருக்கிறார்கள்.

 அவர்களுக்கு கீழ் 12 துணை ஆணையர்கள், அவர்களுக்கு கீழ் வடக்கு மண்டலத்தில் 10, மேற்கு மண்டலத்தில் 12, தெற்கு மண்டலத்தில் 17 கிழக்கு மண்டலத்தில் 9 என மொத்தம் 48 உதவி ஆணையர்கள் உள்ளனர். அதற்கு கீழ், நூற்றுக்கணக்கான ஆய்வாளர்களைக் கொண்டது சென்னை காவல் ஆணையரகம்.

 மேலும், சென்னையில் தற்போது நான்கு மண்டலங்கள் டிஐஜி அந்தஸ்து அதிகாரிகளால் நிர்வாகிக்கப்படுகிறது.

  ஒவ்வொரு மண்டலத்தின் கீழும் 3 துணை ஆணையர்கள் தலைமையில் காவல் மாவட்டங்கள் என மொத்தம் 12 காவல் மாவட்டங்கள் உள்ளன.

 சென்னையில் கூடுதலாக 2 காவல் மாவட்டங்களை உருவாக்க ஏற்கெனவே முடிவெடுக்கப்பட்டுள்ளது.

  அதன்படி ஏற்கெனவே உள்ள 1.வண்ணாரப்பேட்டை, 2. பூக்கடை, 3.மாதவரம், 4.திருவல்லிக்கேணி, 5.கீழ்ப்பாக்கம், 6. மயிலாப்பூர், 7.அடையாறு, 8.தி.நகர், 9.மவுண்ட், 10. அண்ணாநகர், 11.புளியந்தோப்பு , 12. அம்பத்தூர் ஆகிய 12 காவல் மாவட்டங்களுடன் புதிதாக பூந்தமல்லி,  மற்றும் தாம்பரம் ஆகியவை கூடுதலாக உருவாக்கப்படுகிறது.

  தற்போது சென்னைக்குள் அதிகரிக்கும் மக்கள் தொகை, நிர்வாக காரணங்கள், காவல் எல்லை விரிவாக்கம் காரணமாக கவனிக்க முடியாமல் போவது, பராமரிப்பு போன்ற காரணங்களுக்காக சென்னையை இரண்டாக பிரித்து மீண்டும் புறநகர் ஆணையரகம் வருமா என்கிற கேள்வி எழுந்தது.

 அப்படியிருக்க தாம்பரமும், ஆவடியும் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே காவல்துறையையும் பிரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 இந்நிலையில் காவல்துறை மானியக் கோரிக்கை கடந்த 9 ஆம் தேதி தாக்கல் செய்த நிலையில் அதன்மீது விவாதம் இன்று நடைபெற்றது.

அதில் சென்னை காவல் துறை 3 ஆக பிரிக்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.

 

அதன்படி, சென்னை காவல் ஆணையரகம், ஆவடி காவல் ஆணையரகம், தாம்பரம் ஆணையரகம் என மூன்றாக பிரிக்கப்படுகிறது.