200 கோடி ரூபாய் வரி மோசடி! மதுரை மேயரை ராஜினாமா செய்யவைத்த பவர் சென்டர்! அடுத்தது கைதா?
அ.கார்த்தீஸ்வரன்,
மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற வரி முறைகேடு வழக்கில் கைதான வரிவிதிப்புக் குழு தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவரான பொன்வசந்தும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர், அவர் நிபந்தனைகளுடன் கூடிய ஜாமினில் விடுவிக்கப்பட்டார்
இந்நிலையில் மேயர் இந்திராணி பொன் வசந்த், மாநகராட்சி வரி முறைகேடு வழக்கு எதிரொலியாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த ராஜினாமா கடிதத்தை அவர் மதுரை மாநகராட்சி ஆணையர் சித்ராவிடம் சமர்ப்பித்துள்ளார்.
அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறும் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் இந்த ராஜினாமா ஏற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரிலேயே இந்த ராஜினாமா நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேயரின் கணவர் பொன் வசந்த் வரி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நிபந்தனையுடன் கூடிய ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்த சூழலில் மேயரின் ராஜினாமா மதுரை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சியில் சுமார் 200 கோடி ரூபாய் சொத்து வரி முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வரி முறைகேடு தொடர்பாக மாநகராட்சி உதவி ஆணையர் சுரேஷ்குமார், வரிவிதிப்புக் குழு தலைவரின் கணவர் கண்ணன், செந்தில்பாண்டியன், ரவிச்சந்திரன், ஜமால் நஜிம், பாலமுருகன், கருணாகரன், ரவி, முகம்மதுநூர், செந்தில்குமரன், ரெங்கராஜன், கார்த்திக், சகா உசேன், ராஜேஸ்குமார், சதீஸ், தனசேகரன் உள்ளிட்ட பலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக, மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்களான வாசுகி, சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, சுவிதா மற்றும் நகரமைப்பு குழு தலைவர் மூவேந்திரன், வரிவிதிப்பு குழு தலைவர் விஜயலட்சுமி ஆகிய ஏழு பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
வரி முறைகேடு வழக்கில் கைதான வரிவிதிப்புக் குழு தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவரான பொன்வசந்தும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர், அவர் நிபந்தனைகளுடன் கூடிய ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
மாநகராட்சி வரி முறைகேடு வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவின்படி, டிஐஜி அபினவ்குமார் தலைமையிலான விசாரணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, மேயரின் கணவர் பொன்வசந்த் உட்பட மொத்தம் 23 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த விஷயத்தில் ஏற்கனவே மதுரை மாநகராட்சியின் ஐந்து மண்டல தலைவர்கள் மற்றும் இரண்டு குழுத் தலைவர்கள் என ஏழு பேர் ராஜினாமா செய்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக, மேயரின் கணவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், முறைகேடு வழக்கில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணிக்கு நேரடித் தொடர்பு இருந்தும், காவல்துறையினர் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், திமுக தலைமை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மதுரை அரசியல் வட்டாரங்களில் சலசலப்பு ஏற்பட்டது.
மதுரையில் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், மதுரை மாநகராட்சி வரி முறைகேடு தொடர்பாக தொடர்ந்து கண்டனங்களைப் பதிவு செய்து, மேயர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
இந்த சூழலில், மேயரின் ராஜினாமா மதுரை அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பு:- மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் தனது ராஜினாமா கடிதத்தை மதுரை மாநகராட்சி ஆணையர் சித்ராவிடம் சமர்ப்பித்துள்ளார். இந்த ராஜினாமா கடிதம் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, நாளை மறுநாள் மதுரை மாநகராட்சியின் துணை மேயர் நாகராஜன் தலைமையில் ஒரு அவசரக் கூட்டம் நடைபெற உள்ளதாக மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மேயர் அளித்த ராஜினாமா ஏற்கப்படும். பின்னர் அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

admin
