“விஜய் யார் என்றே பிற மாநிலங்களுக்கு தெரியாது” – பிரதமர் வேட்பாளர் குறித்து எல்.கே.சுதிஷ்,M.P பரபரப்பு பேச்சு!
செய்தி: ஜி.குலசேகரன்,
வேலூர்: தமிழக முதல்வர் மேட்டூர் அணைக்கு நீர் திறக்க விமானத்தில் சென்றதற்காக அரசுப் பணம் அதிகளவில் செலவிடப்பட்டுள்ளதாகவும், இது கண்டிக்கத்தக்கது என்றும் தேமுதிக மாநிலங்களவை உறுப்பினர் எல்.கே.சுதிஷ் தெரிவித்துள்ளார். மேலும், வேலூர் விமான நிலையம் எந்த காரணத்தைக் கொண்டும் கைவிடப்படாது என்றும் அவர் கூறினார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸை நேரில் சந்தித்த எல்.கே.சுதிஷ், தனது தொகுதி மேம்பாட்டு நிதியை எந்தெந்த பணிகளுக்கு பயன்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.5 கோடி கிடைத்துள்ளதாகவும், அதனை தனது சொந்த மாவட்டமான வேலூரில் குடிநீர், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக பயன்படுத்துவது தொடர்பாக ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
வேலூர் விமான நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளதாக கூறிய அவர், விமான நிலையத்திற்காக மேலும் 100 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளதாகவும், இதுதொடர்பாக தமிழக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேட்டூர் அணைக்கு நீர் திறப்பதற்காக தமிழக முதல்வர் விமானத்தில் சென்றதையும், சாலையில் வரவேற்பு நிகழ்ச்சிக்காக தடுப்புகள் அமைத்து மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டதாக கூறப்படுவதையும் சுதிஷ் விமர்சித்தார்.
அனிதா நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்காதது குறித்து தனக்கு தெரியாது என்றும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தில் தான் பேசியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கியிருப்பதை வரவேற்பதாகவும், இதன் மூலம் ஊழியர்களுக்கு நன்மை கிடைக்கும் என்றும் கூறினார்.
தமிழகத்தில் தவெக வெற்றி யாரும் எதிர்பார்க்காத ஒன்று என்றும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு இருக்கலாம் என்ற சந்தேகம் தனக்கும் இருப்பதாகவும் சுதிஷ் தெரிவித்தார்.
பிரதமர் வேட்பாளர் குறித்து பேசிய அவர், “மோடியும் ராகுலும் தான் பிரதமர் வேட்பாளர் பட்டியலில் உள்ளனர். விஜய் யார் என்றே பிற மாநிலங்களுக்கு தெரியாது. எனவே பிரதமர் வேட்பாளர் பட்டியலில் விஜய் இடம்பெற வாய்ப்பில்லை” எனக் கூறினார்.
தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி சட்டமன்றத்தில் “ஜஸ்ட் பாஸ்” நிலையில் இருப்பதாக விமர்சித்த சுதிஷ், சட்டமன்றத்தில் அனைத்து துறை அமைச்சர்களும் தங்களது துறைகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதாகவும் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்திற்கு கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க முயற்சி மேற்கொள்வேன் என்றும் அவர் கூறினார்.
மேலும், குப்பம் சர்வதேச விமான நிலையம் என்ற காரணத்தை காட்டி வேலூர் விமான நிலையம் ஒருபோதும் கைவிடப்படாது; வேலூர் விமான நிலையத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எல்.கே.சுதிஷ் உறுதியளித்தார்.
பேட்டியின்போது தேமுதிக நிர்வாகிகள் புருஷோத்தமன், பிரதாப், Engg-ஸ்ரீதர், wood-சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

admin
