கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ.வை கைது செய்யக் கோரி வேலூரில் பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் – சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவும் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ.வை கைது செய்யக் கோரி வேலூரில் பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் – சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவும் வலியுறுத்தல்

செய்தி: கு. அசோக்,
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை கைது செய்ய வேண்டும் என்றும், அவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வேலூரில் பெண்கள் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே அகில இந்திய பெண்கள் முற்போக்கு கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் சரோஜா தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

செஞ்சி பகுதியில் காணாமல் போன ஏழு வயது குழந்தையை உடனடியாகக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும், கடலூர் மாவட்டத்தில் காணாமல் போன பெண் குழந்தைகள் தொடர்பான வழக்குகளில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்து, அவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு காவல்துறைக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.