"வாட்டர் பெல்" திட்டத்தை தமிழக அரசு ஏன் அறிமுகப்படுத்துகிறது?

  "வாட்டர் பெல்" திட்டத்தை தமிழக அரசு ஏன் அறிமுகப்படுத்துகிறது?

ம.பா.கெஜராஜ்,

  தமிழகத்திலுள்ள 55 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 63 லட்சம் மாணவர்களும், 14 ஆயிரம் தனியார் பள்ளிகளில் 68 லட்சம் மாணவர்களும் என மொத்தம் ஒரு கோடியே 30 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கும் நிலையில் மாணாக்களின் நலன்கருதி வாட்டர் பெல் திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது தமிழ்நாடு அரசு.

ஏன் இந்த திட்டம் அறிமுகம்.

 சமீபத்தில்  கோவையிலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர் அவர். கடந்த மாதத்தில் விடுமுறை நாளாக இருந்த சனிக்கிழமையன்று காலை 6 மணியளவில் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்றார். காலையிலிருந்து மாலை வரை தொடர்ந்து கிரிக்கெட் விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்தார். மிகவும் சோர்வாக இருந்த அந்த மாணவன், மறுநாள் காலையில் எழவேயில்லை. மயக்கமாக இருந்த அவனை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

   மாணவன் கோமா நிலைக்குச் சென்று விட்டதாகக் கூறிய மருத்துவர்கள், சிறுவனின் உடலில் நீர்ச்சத்து மிகவும் குறைந்திருந்ததே இதற்குக் காரணமென்று கூறி சிகிச்சை மேற்கொண்டனர். இரு வார சிகிச்சைக்குப் பின், மாணவன் நலம் பெற்று வீடு திரும்பினார்.

    இந்த நிகழ்வு, பள்ளி மாணவர்கள் போதிய அளவு தண்ணீர் குடிப்பதன் அவசியத்தை உணர்த்துகிறது. இதற்காகவே, வெளிநாடுகள் பலவற்றிலும் உள்ள 'வாட்டர் பெல்' திட்டத்தை இந்தியாவில் பல மாநிலங்கள் செயல்படுத்தத் தொடங்கியுள்ளன.

   இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் வாட்டர் பெல் திட்டத்தை அமல்படுத்துவதற்காக பள்ளி கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

   'வாட்டர் பெல்' தமிழ்நாட்டில் எவ்வாறு செயல்படுத்தப்படும்?

வாட்டர் பெல் திட்டம் பற்றி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதன்படி, அனைத்து மாணவர்களும் தண்ணீருடனோ அல்லது தண்ணீர் இல்லாமலோ பாட்டிலை வீட்டிலிருந்து கொண்டு வர அறிவுறுத்தப்பட வேண்டும்.

 காலைநேர கூட்டத்தின் போது தண்ணீர் குடிப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

தண்ணீர் குடிப்பதற்காக அடிக்கப்படும் பெல்லானது, வழக்கத்தை விட வித்தியாசமானதாக மாணவர்களுக்கு தண்ணீர் குடிப்பதை அறிவுறுத்தும் வகையில் இருக்க வேண்டும். இந்த பெல் சத்தம் கேட்டதும் மாணவர்கள் அவர்களின் தேவைக்கேற்ப தண்ணீர் குடிக்க வேண்டும்.

  வாட்டர் பெல்லுக்கான நேரமானது காலை 11 மணி , பகல் 1 மணி, பிற்பகல் 3 மணி என பள்ளிகளின் வசதிக்கேற்ப இருக்கலாம். இந்த நேரத்தில் மாணவர்கள் வகுப்பை விட்டு வெளியேற அனுமதிக்காமல், வகுப்புச் சூழல் பாதிக்காமலும் 2 முதல் 3 நிமிடங்கள் தண்ணீர் குடிக்க ஆசிரியர்கள் அனுமதிக்க வேண்டும்

  தண்ணீர் குடிக்க அனுமதிப்பதும் தனிமனித உரிமையும்!

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தேவையான அளவுக்கு தண்ணீர் குடிப்பது அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்காற்றுகிறது.

''பள்ளிக் குழந்தைகள் நிறைய விளையாடுவதால் வியர்வை அதிகமாக வெளியேறும். அதனால் மற்றவர்களை விட அவர்கள்தான் அதிகளவில் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். தேவையான அளவுக்கு தண்ணீர் குடிக்காத பட்சத்தில் நீர்ச்சத்து இழப்புடன் உடல் சோர்வு, மனசோர்வு ஏற்படும். கவனமின்மை அதிகரிக்கும். அடிக்கடி நீர்ச்சத்து குறையும் போது, சிறுநீர் தொற்று வரும். பதின்பருவத்தினருக்கு முகப்பருக்கள் தோன்றும்.''

  இன்றைய காலகட்டத்தில், துரித உணவு முறைகளாலும், தண்ணீர் தேவையான அளவுக்குக் குடிக்காத காரணத்தாலும் ஏராளமான குழந்தைகள், மலச்சிக்கலை சந்திப்பதாக கூறும் மருத்துவர்கள், நமது உடலில் ஏற்கெனவே உள்ள நீர்ச்சத்தைப் பராமரிக்கவும், உடல் செயல்பாட்டுக்கேற்பவும் அனைவரும் குறிப்பாக குழந்தைகள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டுமென்கின்றனர்.

   ''குழந்தைகளுக்கு முக்கியமாக பதின் பருவத்தினருக்கு உயரம், எடை இரண்டுமே வேகமாக அதிகரிக்கும் என்பதால் உடலுக்கு நிறைய ஆற்றல் தேவைப்படும். அதற்கு நீர்ச்சத்து மிக முக்கியம். குழந்தையின் உடல் மற்றும் வளர்ச்சிக்கேற்ப தாகம் ஏற்படும். அதற்குரிய அளவில் கட்டாயம் தண்ணீர் குடிக்க வேண்டும். சமவெளிகளில் ஒவ்வொரு  மாணவனும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திலிருந்து அதிகபட்சமாக 3 மணி நேரத்துக்கு ஒரு முறையாவது தண்ணீர் குடிக்க வேண்டும்.'' என்கிறார் ஊட்டச்சத்து நிபுணா.

 நீர்ச்சத்து குறைவதால் வரும் பாதிப்புகள்

    உடலில் நீர்ச்சத்து குறையும் பே?து, நமது உடலின் இயக்கத்தில் முக்கியப் பங்காற்றும் எலக்ட்ரோலைட்  சமநிலை இல்லாமல் போக வாய்ப்புள்ளது என்று கூறும் மருத்துவர்கள் அதனால் உடலில் ரத்த ஓட்டம் குறையும், சில நேரங்களில் ரத்தப்போக்கு ஏற்படவும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

 ''ஒருவருக்கு நீர்ச்சத்து முற்றிலும் குறையும் பட்சத்தில் சிறுநீரகம் செயல்பாட்டை நிறுத்திவிடும். தண்ணீர் குடிக்காமலே வெகுநேரம் விளையாடும் போது தசைப்பிடிப்பு ஏற்படும். தொடர்ச்சியாக இந்த பாதிப்பு ஏற்படும்போது, மாரடைப்பு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. அதனால் பள்ளிகளில் 'வாட்டர் பெல்' வைப்பது மிகவும் நல்ல திட்டம் என்பதோடு மிகவும் அவசியமானதும் கூட.'' என்கின்றனர் மருத்துவர்கள்.

  கொடைக்கானல், ஊட்டி, வால்பாறை போன்ற மலைப்பகுதிகளிலும், ஒரு நாளுக்கு இதே அளவு தண்ணீர் குடிக்க வேண்டுமா என்ற சந்தேகமும் பலருக்கு எழுகிறது. மலைப்பகுதியில் வியர்வை வராது என்பதால் அங்கே தண்ணீரின் தேவை குறைவாக இருக்கும்,

 அதேநேரத்தில் அங்கேயும் உடல் உழைப்பு இருப்பவர்கள் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

''எங்கெங்கே காற்றுப்போக்கு குறைவாயிருக்கிறதே?, வெப்பம் அதிகமாகியிருக்கிறதே? அங்கெல்லாம் தண்ணீர் தேவை அதிகமாக இருக்கும். தமிழகத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு தளத்திலும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வைக்கப்படுகிறது.

 ''சிறுநீர் கழிக்கவும் அனுமதி அளிப்பது அவசியம்''

 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 'வாட்டர் பெல்' வைப்பது நல்ல திட்டம் என்றாலும், தண்ணீர் குடிக்க அனுமதிக்கும் அதே நேரத்தில் சிறுநீர் கழிக்கவும் போதிய கால இடைவெளியில் அவகாசம் வழங்க வேண்டும்.

அதற்கேற்ப கழிப்பறை வசதியையும், சுகாதாரத்தையும் பள்ளி நிர்வாகங்கள் பேணவேண்டியது அவசியம்.

  "தண்ணீருக்கு மாற்று குளிர் பானங்கள்  அல்ல"

தண்ணீருக்குப் பதிலாக குளிர்பானங்கள் உற்சாக பானங்கள் குடிப்பது கூடுதல் ஆபத்துகளை விளைவிக்கும்  

''மாணவர்கள் இதுபோன்ற பானங்களை தொடர்ந்து குடிக்கும்போது, முதலில் உடல் பருமன் ஏற்படும். அதன் தொடர்ச்சியாக சிறுவயதிலேயே நீரிழிவு பாதிப்பும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதனால் தாகத்துக்கு எதையாவது குடிக்க வேண்டுமென்று இத்தகைய பானங்களைக் குடிக்காமல் பாதுகாப்பான, சுத்தமான குடிநீரை மட்டுமே குடிக்க வேண்டும். இந்த விஷயத்தில் பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் என 3 தரப்பினருக்கும் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்,'' என்பதே சமூகபார்வையாளர்களின் அவா.