எம்.எல்.ஏ. பெயரை சொல்லி மிரட்டுகிறார்கள்!” – தனியார் பல்கலைக்கழகத்திற்கு அருகே கூடாரம் அமைத்த 45 ராஜஸ்தான் குடும்பங்கள் ஆட்சியரிடம் புகார்!
செய்தி: கு.அசோக்,
வேலூர்: காட்பாடியில் தனியார் பல்கலைக்கழகத்தின் அருகே பல ஆண்டுகளாக கூடாரங்கள் அமைத்து வசித்து வரும் ராஜஸ்தானைச் சேர்ந்த 45 நாடோடி குடும்பங்களை காலி செய்யுமாறு மிரட்டுவதாகக் கூறி, அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம், காட்பாடி வைபவ் நகரில் உள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் மூன்றாவது நுழைவாயில் அருகே, தனியாருக்குச் சொந்தமான இடத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த சுமார் 45 நாடோடி குடும்பங்கள் 7 ஆண்டுகளுக்கும் மேலாக கூடாரங்கள் அமைத்து வசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த நில உரிமையாளரும், அருகில் வசிப்பவருமான சிவக்குமார் என்பவர், கூடாரங்களை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்குச் செல்லுமாறு தங்களை மிரட்டுவதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும், காட்பாடி சட்டமன்ற உறுப்பினரின் பெயரைச் சொல்லி மிரட்டுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, தங்களை அங்கிருந்து காலி செய்யாமல் தொடர்ந்து வசிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, அரசின் அனுமதியின்றி மின் கம்பியில் கொக்கி போட்டு மின்சாரம் பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்ததில், 20 கூடாரங்களில் அனுமதியின்றி மின்சாரம் பயன்படுத்தியது கண்டறியப்பட்டதாகவும், சம்பந்தப்பட்டவர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கூடாரங்களை காலி செய்யக் கோரும் விவகாரம் ஒருபுறமும், அனுமதியின்றி மின்சாரம் பயன்படுத்தியதாக எழுந்த புகார் மறுபுறமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காட்பாடி பகுதியை பொறுத்த வரை கல்வி நிறுவனங்கள் முதற்கொண்டு பல கம்பெனிகள் மின்சார முறை கேடுகளில் ஈடுபடுவது பரவலாக அறியப்பட்டு ஒன்றே?! ஆனாலும் மின்வாரியம் அதற்கெல்லாம் கை கட்டி வேடிக்கை பார்த்து வருவது தான் வேதனை அளிக்கிறது மின்வாரியத்திற்கு நஷ்டத்தையும் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது.

admin
