சீட்டு கம்மீப்பா... மனம் கோணி கிடக்குதா திமுக கூட்டணி கட்சிகள்!
ம.பா.கெஜராஜ்,
திமுகவின் சீட்டு பங்கீட்டு அணுகுமுறையாலும், தொகுதிகள் குறைப்பாலும் கூட்டணிக் கட்சிகள் இப்போது வெளிப்படையாகவே குமுற ஆரம்பித்துவிட்டன.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்த கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் சுமார் 20 நாட்கள் காங்கிரஸ் கட்சியுடனே மல்லுக்கட்டிக் கொண்டிருந்தது திமுக.
உள்ளூரில் ஆரம்பித்து டெல்லி தலைமை வரை பஞ்சாயத்து நீண்டு, கடைசியாக 28 தொகுதிகள் + ஒரு ராஜ்யசபா சீட்டை கொடுத்தது திமுக.
அதன்பின்னர் மதிமுகவோடு பேச ஆரம்பித்தனர். இரட்டை இலக்கங்களில் ஆரம்பித்த பேச்சுவார்த்தை, போன முறை கொடுத்த எண்ணிக்கையையாவது கொடுக்க வேண்டுமென நீண்டது. இறுதியாக 4 தொகுதிகளை பெற்றுக்கொண்டது மதிமுக. அழுது கொண்டே சிரிக்கும் கடைதாக அக்கட்சி இருக்கிறது.
2021 தேர்தலில் 6 தொகுதிகள் மட்டுமே பெற்றோம், இம்முறை இரட்டை இலக்கம் வேண்டுமென இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளும் ஆசைப் பட்டார்கள்.
ஆனால், திமுக சொன்ன எண்ணிக்கையில் தோழர்களுக்கு சிவப்பு பை காலியாக கொடுக்கப்பட்டது.
அதன்பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தாலும், திமுக கூறிய எண்ணிக்கையை கொஞ்சமும் உயர்த்தவில்லை. இது வேலைக்கு ஆகாது என முடிவு செய்த இந்திய கம்யூனிஸ்ட் 5 தொகுதிகளை வாங்கிக்கொண்டு அமைதியானது.
ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசியக் குழு, மாநிலக்குழு கூட்டங்களை எல்லாம் கூட்டி, அலைமோதி பார்த்தார்கள்.
ஆனாலும், 5 தொகுதிகள் தான் என திமுக கறார் காட்டியதால், 'மதவாத சக்திகளை காலூன்ற விட மாட்டோம்' என்ற டெம்ப்ளேட்டுடன் 5 சீட்டுக்கு ஒப்புக்கொண்டு கையெழுத்தைப் போட்டார் சண்முகம்.
25 தொகுதிகள், துணை முதல்வர் பதவி என்றெல்லாம் நம்பிக்கையோடு பேச்சுவார்த்தைக்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் வழக்கமான அதிர்ச்சி அல்வாவையே கொடுத்தது அறிவாலயம்.
கெஞ்சிக் கூத்தாடி கடைசியில் 8 தொகுதிகளோடு டீலை முடித்தார் திருமாவளவன்.
கூடுதல் தொகுதிகள் வாங்கலாம் என திமுக தலைமையை அணுகிய ஐயுஎம்எல் தலைவர் காதர் மொய்தீனுக்கு, கொடுக்கப்பட்ட தொகுதிகளைப் பார்த்ததும் திருமாவளவனுக்கு மயக்கமே வந்துவிட்டது.
பெரிய கட்சிகளே அல்லாடிக் கொண்டிருந்தபோது, சிறிய கட்சிகளால் சாதிக்க முடியவில்லை.
ஒரு சில சீட்டுகள் தான் தருவோம், அதிலும் 'டார்ச் லைட்டை' வெளிச்சத்தை விட உதயசூரியனின் வெளிச்சம் ஜாஸ்த்தி என்று திமுக திரும்ப திரும்ப சொன்னதால், மக்கள் நீதி மய்யம் போட்டியே போடாது என்று சொல்லிவிட்டு ' தேர்தல் தியாகி' ஆனார் கமல்ஹாசன்.
என்னன்னமோ பேசி சீட்டு கேட்டுப் பார்த்த வேல்முருகன் வேறு வழியின்று கூட்டணியை விட்டே வெளியேறிவிட்டார்.
இவை எல்லாவற்றையும் விட தேமுதிக, மநீம போன்ற புதிய கட்சிகள் கூட்டணிக்கு வந்துள்ளதால்தான் உங்களுக்கு தொகுதிகளை குறைக்கிறோம் என திமுக காரணம் சொன்னது தான் ஹைலைட்.
அதில், மநீம தேர்தலே வேண்டாம் என விலகிவிட்டார்கள். ஆனால், தேமுதிகவுக்கு 10 தொகுதிகளை அள்ளிக் கொடுத்து நாயுடு லாபி செய்திருக்கிறார்கள்.
மணம் கோணும் கூட்டணிக் கட்சிகள்:
கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் எப்படியோ சமாதானமாகி தொகுதிப் பங்கீட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டார்கள். ஆனால், குறைவான தொகுதிகளைப் பெற்றதால், தலைமையை நோக்கி தொண்டர்கள் பல்வேறு கேள்விகளையும் எழுப்ப ஆரம்பித்துவிட்டனர்.
இதன் வெளிப்பாடாகவே திருமாவளன், "மக்கள் நீதி மய்யத்தை டார்ச் சின்னத்தில் போட்டியிட அனுமதித்து கூட்டணியின் நன்மதிப்பை உயர்த்த வேண்டும்.
தனிச் சின்னத்தில் போட்டியிட விரும்பும் கட்சிகளை அனுமதிக்காமல் இருப்பது, சுதந்திர அரசியல் நடவடிக்கைகளை முடக்கிப்போட்டுவிடும்" என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தகவல் கொடுக்கிறார்கள்.
குறிப்பாக மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பாலபாரதி, "ஏன் இடதுசாரிகளுக்கு மட்டும் தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. தங்கள் வீட்டில் ஏற்பட்ட துக்கத்துக்கு கூட இத்தனை கலங்காத தோழர்கள் இன்றைய நாளில் அத்தனை துயரத்தோடு இருக்கிறார்கள்.
இடதுசாரிகளை இந்த அளவுக்கு கீழே தள்ளுவது நியாயமா? இடதுசாரிகளை வேண்டாவெறுப்பாக கூட்டணியில் வைத்துள்ளீர்களா?" என ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார்.
மதிமுக அவைத் தலைவர் அர்ஜுன ராஜ், "தனிச் சின்னத்தில் போட்டியிடவில்லையே என சிரித்துக்கொண்டே அழுகின்றோம். மதிமுகவின் தகுதி, தரத்துக்கு ஏற்ப தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என்ற வருத்தம் உள்ளது" என்று விரக்தியோடு பேசினார்.
கமல்ஹாசனை தேர்தலை புறக்கணித்ததையும், அதன் பின்னால் உள்ள அழுத்தங்கள் குறித்தும் மநீம தொண்டர்கள் வேதனையோடு சமூக வலைதளங்களில் பதிவிடுவதையும் பார்க்க முடிகிறது.
இப்படிப்பட்ட வருத்தத்தோடு, களத்தில் கூட்டணி கட்சியினர் தேர்தல் பணியில் உற்சாகத்தோடு ஈடுபடுவார்களா என்றும் அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, திமுகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் நையாண்டி செய்து வருகிறார்கள்.
திமுக கூட்டணிக் கட்சிகள் 'அடிமை சாசனம்' எழுதிக் கொடுத்துவிட்ட என ஏகத்துக்கும் விமர்சிக்கவும் தொடங்கியுள்ளார்.
கூடவே அதிமுக கூட்டணியில் சின்ன கட்சி பெரிய கட்சி என்பதெல்லாம் கிடையாது. நாங்கள் எல்லோரும் சமம் தான் என்று எடப்பாடி சொல்லி அவரது பார்ட்டனர்களை குஷிபடுத்தியிருக்கிறார்.

admin
