எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் சலசலப்பு!
ம.பா.கெஜராஜ்,
மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கிய எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.
ஆம், அக்கட்சியின் பொதுச் செயலாளரான வி.ஆர். ரஞ்சித் குமார், ராஜினாமா செய்துவிட்டார். அதன் பின்னர் அவர்¢ விஜய்யின் தவெகவில் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்தக் கட்சியின் மாநில பொதுச் செயலாளராக இருந்த முத்தியால்பேட்டை வி.ஆர். ரஞ்சித் குமார் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது ராஜினாமா கடிதத்தை நேரடியாக கட்சியின் நிறுவனர் பண்ருட்டி ராமச்சந்திரனிடம் ஒப்படைத்து உள்ளார்.
அரசியல் பயணத்தில் நெடும் அனுபவம் கொண்டவர் பண்ருட்டி ராமச்சந்திரன். திமுக, அதிமுக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகளில் பணியாற்றிய அவர், இறுதியாக அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்த ஓ. பன்னீர்செல்வம் அணியுடன் இணைந்து செயல்பட்டு வந்தார்.
கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி பண்ருட்டி ராமச்சந்திரனை முன்னிலையாகக் கொண்டு எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்கப்படும் என்று பண்ருட்டி ராமச்சந்திரனும், ரஞ்சித் குமாரும் தெரிவித்திருந்தனர். இதனால் அந்தக் கட்சியின் எதிர்காலம் குறித்து ஒரு எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது.
ஆனால், கட்சி தொடங்கிய சில நாட்களிலேயே இப்படியான ராஜினாமா முடிவு எடுக்கப்பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்நிலையில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், வி.ஆர். ரஞ்சித் குமார் அந்தக் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
குறிப்பாக, காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் அவர் போட்டியிடலாம் என்ற பேச்சும் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகிறது. இதனால் அவரது இந்த திடீர் முடிவு, அரசியல் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட ஒரு முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.
கட்சி தொடங்கிய ஒரு மாதத்திலேயே முக்கிய பொறுப்பில் இருந்தவர் விலகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

admin
