சுந்தர்.சி 11-வது படித்தவர்! அறிவு இல்லை என பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேச்சு!
அ.கார்த்தீஸ்வரன்,
"சுந்தர்.சி 11-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்பதால், அவருக்கு எதையும் படித்துப் புரிந்துகொள்ளும் அறிவு இல்லை" என்று மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காட்டமாக பேசியுள்ளார்.
மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கிரம்மர்புரம், முரட்டன் பத்திரி உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியது: "எனது அரசியல் வாழ்க்கையில் எப்போதும் கட்சியின் கொள்கை, செயல்பாடு, ஆட்சியில் செய்த மற்றும் செய்யப்போகும் திட்டங்கள் சாதனைகள் பற்றியே பேசியுள்ளேன்.
என்னை எதிர்த்து நின்ற வேட்பாளர்கள் குறித்து நான் எந்த ஒரு வார்த்தைகூட தவறாக பேசியது இல்லை. அவர்களும் என்னை பற்றி தவறாக பேசியது இல்லை.
ஆனால், மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி சார்பில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளராக நடிப்பதற்காக 'சினிமா சங்கி' ஒருவர் நிறுத்தப்பட்டுள்ளார்.
இவருக்கும் மதுரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், இவரது தயாரிப்பாளரான புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் இவரை வேட்பாளராக நடிப்பதற்காக களம் இறக்கியுள்ளார்.
இந்த வேட்பாளரின் மனைவி, ஜிம்னாஸ்டிக் சாம்பியன் போன்று கடந்த 15 - 20 ஆண்டுகளில் திமுக, காங்கிரஸ், பாஜக என மூன்று கட்சிகள் தாவியவர். தற்போது, நான்காவது முறையாக ஏ.சி. சண்முகத்தின் கட்சி வழியாக, 5-ஆவது கட்சியாக இவரது கணவரை அதிமுகவில் போட்டியிட வைத்துள்ளார்.
அந்த வேட்பாளர், தான் வெற்றி பெற்றால் மதுரையில் வெறும் 15 நாட்கள் மட்டுமே இருப்பேன் என்று வெளிப்படையாகவே கூறுகிறார்.
ஏன் அவரை 'சினிமா சங்கி' என கூறுகிறேன் என்றால், அவர் வந்தவுடன் முதலில் சென்றது ஆர்எஸ்எஸ் அலுவலகம்தான்.
அவருக்கு மதுரையைப் பற்றி எந்த புரிதலும் இல்லாமல், இயக்குநர் பார்த்திபன் குமார் என்பவர் கற்றுக்கொடுத்தபடி, எல்லா இடத்திலும் "இது சரியில்லை" என்ற வார்த்தையை மட்டுமே பேசி வருகிறார்.
குறிப்பாக, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றால், மன அமைதி கிடைக்கும் என்றுதான் மதுரை மக்கள் கூறுவர். ஆனால், இந்த வேட்பாளர் சென்றால், பார்த்து அழுகை வருவதாக கூறுகிறார். அவர், கோயில் வரலாற்றைப் படிக்க வேண்டும்.
கடந்த 2018-ம் ஆண்டு, அதிமுக ஆட்சியில் கோயிலில் உள்ள வீரவசந்தராயர் மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அதன்பிறகு அந்த மண்டபத்தை சீரமைக்க அவர்கள் ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திமுக ஆட்சி 2021-ல் அமைந்த பின்னர். ரூ.35 கோடி மதிப்பீட்டில் 20 அடி உயர 70 கல் தூண்கள் ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கற்கள் கொண்டுவரப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. வரும் செப்.17-ம் தேதி கோயில் குடமுழுக்கு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் தெரிந்துகொண்டு பேசவேண்டும்.
கழிப்பறை வசதியில்லை என அவர் கூறியுள்ளார். ஆனால், நான் வெற்றிபெற்ற பின்னர், 3 மடங்கு கூடுதலாக கழிப்பறைகள் கட்டியுள்ளேன். இது தெரியாமல் அவர் குறை கூறுகிறார்.
இந்த வேட்பாளர் 11-ஆம் வகுப்பு வரை மட்டுமே தேர்ச்சி பெற்றவர், என்பதால் எதையும் படித்துப் புரிந்துகொள்ளும் அறிவு இல்லை. மதுரையின் சாக்கடைப் பிரச்சினைக்கு ரூ.3,500 கோடி திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, ரூ.400 கோடி நிதி ஒதுக்கி பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று அவர் சொன்னார்.
மேலும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், ''சுந்தர்.சி மனைவி முன்னதாக ஆந்திராவில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், மாநகர மக்கள் மீது குப்பைக்கு என தனி வரி விதிக்க வேண்டும் என பேசினார்.
அவர் அன்று பேசியது இப்போது புரிகிறது.
எம்எல்ஏ ஆகிவிட்டால் குப்பை டெண்டர் எடுக்கலாம் என திட்டமிட்டுதான் அவ்வாறு பேசியுள்ளார்.
இந்த தீய சக்திகள் திரும்ப திரும்ப பொய்யை கூறி வருவதால் இதெல்லாம் பேசவேண்டியுள்ளது. இவரை வைத்து மாநில அளவில் பெரிய நாடகத்துக்குத் தயார்படுத்துகின்றனர்.
கபட நாடகம் போட்டு கூத்தாடும் தனி நபர்களை மதுரை மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் டெபாசிட் இழக்கச் செய்யவேண்டும். நான் மதுரைகாரன்டா என நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன். ஒரு கை பார்த்துக்கொள்வோம்" என்று கொக்கரித்தார்.

admin
