கூட்டுறவு பஞ்சாலைகள் மீண்டும் இயங்க தீர்மானம்!
கே.ஏ.ஜெகதீஸ்வரி,
தமிழ்நாட்டில் மூடப்பட்டுள்ள என்டிசி மற்றும் கூட்டுறவு பஞ்சாலைகள் மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! பஞ்சாலைத் தொழிலாளர் சங்க மாநில குழு கூட்டத்தில் தீர்மானம் நீறைவேற்றியிருக்கிறார்கள்.
தமிழ்நாடு பஞ்சாலை தொழிலாளர் சம்மேளனத்தின் மாநிலக்குழு கூட்டம் மாநில தலைவர் எம். சந்திரன் தலைமையில் ராஜபாளையம் சிஐடியு அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட செயலாளர் ஜி.கணேசன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
சமீபத்தில் இயற்கை எய்திய தொழிலாளி வர்க்கத் தலைவர்கள் தென் சென்னை பொன்முடி, கோயம்புத்தூர் ஆறுமுகம், திருப்பூர் பழனிச்சாமி உட்பட இயற்கை எய்திய தலைவர்களுக்கும் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் மரணம் அடைந்த தொழிலாளர்களுக்கும் கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது .
மாநில குழு கூட்டத்தை சிஐடியு மாவட்டத் தலைவர் எம். மகாலட்சுமி துவக்கி வைத்தார். நடைபெற்ற பணிகள் குறித்து அறிக்கையை பொதுச் செயலாளர் எம். அசோகன் முன் வைத்தார் .வரவு செலவு அறிக்கை பொருளாளர் எஸ். சக்திவேல் முன் வைத்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள என்.டி.சி பஞ்சாலைகள் கடந்த நான்கு ஆண்டுகளாக இயக்கப்படாமல் உள்ளது. அதை நம்பி இருந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்படைந்து உள்ளனர். நிரந்தர தொழிலாளர்கள் மட்டும் காலம் கடந்து ஊதியம் பெற்று வருகின்றனர். அவர்களுக்கும் ஊதியம் ஆறு மாதங்களாக வழங்காமல் உள்ளது. ஆலைகளை ஒன்றிய அரசு இயக்க வேண்டும்.
கடந்த காலத்தில் தமிழ்நாட்டில் 18க்கும் மேற்பட்ட கூட்டுறவு பஞ்சாலைகள் இயங்கி வந்தன. தற்பொழுது கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை ,தேனி, கிருஷ்ணகிரி ஆகிய ஆறு மாவட்டங்களில் மட்டும் கூட்டுறவு பஞ்சாலைகள் இயங்கி வருகின்றன.
குறிப்பாக ஆதிராவிடர் மற்றும் பெண்கள் நல்லனுக்காக இராமநாதபுரம் கூட்டுறவு பஞ்சாலை இயங்கி வருகிறது. கூட்டுறவு பஞ்சாலைகளில் நிரந்தரம் என்று பணிபுரிந்து வருபவர்கள் 320 பேர் மட்டுமே. சுமார் 1500 க்கு மேல் தினக்கூலி மற்றும் ஒப்பந்த முறையில் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இரண்டு ஆண்டுகளில் 480 நாள் பணிபுரிந்து இருந்தால் சட்டப்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற சட்டம் பின்பற்றப்படுவது இல்லை. தொழிலாளர் துறை அதிகாரிகள் பிறப்பிக்கும் பணி நிரந்தரம் குறித்த உத்தரவுகளும் அமலாக்கப்படாமல் தொழிலாளர் நலனுக்கு எதிராக மேல்முறையீடுகள் செய்யப்படுகிறது.
1800 தொழிலாளர்களில் மூன்றில் இரண்டு பங்கு சுமார் 1200 பெண் தொழிலாளர்கள் கூட்டுறவு பஞ்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
அவர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். பணி நிரந்தரம் உட்பட சட்டப்படியான உரிமைகள் வழங்க வேண்டும் அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் நிர்வாக மேல்முறையீடு உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது .208 பேர் பணி நிரந்தரம் உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் பணியில் நிரந்தரம் செய்ய வேண்டும்.நீதிமன்ற தீர்ப்பு அமுலாக்காத நிலையில் நிர்வாகத்தை எதிர்த்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
பஞ்சாலைகளில் தொழில்வாரியான கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த காலங்களில் போடப்பட்டு வந்தது. கடந்த 23 ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லை. தொழில் தீர்ப்பாயத்தில் நடந்த வழக்கும் தீர்வு இல்லாமல் முடிக்கப்பட்டது. எனவே குறைந்தபட்ச கூலியை நிர்ணயம் செய்ய குழுவை அமைத்து பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
வருங்கால வைப்பு நிதியிலிருந்து உயர் பென்ஷன் பெறுவதற்காக விண்ணப்பித்த பலருக்கும் இன்னும் உயர்பென்ஷன் கொடுக்கப்படாமல் உள்ளது. காலம் கடத்தாமல் உயர் பென்ஷன் கிடைப்பதற்கும், குறைந்தபட்ச பென்ஷனாக மாதம் ரூ.9000- வழங்குவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

admin
