உசிலம்பட்டியில் சசிகலா கூட்டம்! ஓபிஎஸ் டீம் பங்கேற்பு?

உசிலம்பட்டியில் சசிகலா கூட்டம்! ஓபிஎஸ் டீம் பங்கேற்பு?

  எம்.ஏ.கண்ணன்,

 ஜெயலலிதா பிறந்தநாளில் உசிலம்பட்டியில் முக்கிய கூட்டம் நடத்திட சசிகலா ஏற்பாடு செய்திருப்பதாகவும், அதில்  ஓபிஎஸ் டீம் பங்கேற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

 அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடிக்கு எதிராக அணி திரட்டும் பணியில் சசிகலா இறங்கி உள்ளார். ஜெயலலிதா பிறந்தநாளில் உசிலம்பட்டியில் நடக்கும் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் ஓபிஎஸ், மற்றும் முன்னாள் அமைச்சர்கள் முன்னாள் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் பங்கேற்கப்போவதாக தெரிகிறது.

 ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் வரும் 24ம் தேதி வருகிறது. இவரது பிறந்தநாளை இதுவரையில் அதிமுகவின் அனைத்து தரப்பினரும் தனித்தனியாக கொண்டாடி வருகின்றனர்.

  அதில் சசிகலா, சென்னையில் இருந்து ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த முறை வரும் 24ம் தேதி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடக்கும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் சசிகலா பங்கேற்கிறார்.

  அங்கு ஜெயலலிதாவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பின்னர் நடக்கும் விழாவில் பலருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்த விழாவில் ஓபிஎஸ் அல்லது அவரது ஆதரவு உள்ளூர் தொகுதி எம்எல்ஏ அய்யப்பன் பங்கேற்க கூடும் என்று கூறப்படுகிறது.

   இந்த முயற்சியினால், அதிருப்தியில் உள்ள அதிமுகவினரின் ஆதரவை பெற முடியும் என்றும், இதன்மூலம் எடப்பாடி தரப்புக்கு நேரடியாகவே நெருக்கடியை தர முடியும் என்று கருதுகிறார்களாம்.

   இந்த விழாவில் பங்கேற்பதற்காக மதுரை வரும் சசிகலாவிற்கு மதுரை காளவாசல் பகுதியில் இருந்து உசிலம்பட்டி வரையில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சிகளில் அதிமுகவினர் அதிகளவில் பங்கேற்கலாம் என சசிகலா தரப்பினர் எதிர்பார்க்கின்றனர்.