உச்சகட்ட வாக்கு பதிவு நடந்த புதுச்சேரி! அசாம் கேரளாவில் வாக்குபதிவு நிறைவு!
ம.பா.கெஜராஜ்
புதுச்சேரியில் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. 30 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் 10 லட்சத்து 14 ஆயிரத்து 70 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
மொத்தம் 1099 வாக்குச்சாவடிகள் இருந்தன. அதில் பதற்றமானவை 209, கிரிட்டிக்கல் 5 இருந்தன. வாக்குப் பதிவு பணிகளில் 5 ஆயிரம் அதிகாரிகள், பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
புதுச்சேரி தேர்தலை கிர்கிஸ்தான், மால்டோவா, மங்கோலியா, பூடான் உட்பட ஆறு வெளிநாடுகளில் இருந்து 9 உறுப்பினர்கள் புதுச்சேரி வந்து பார்வையிட்டனர்.
எஸ்ஐஆர் திருத்தத்தின்போது 1.03 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் மொத்தம் 9.5 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஏற்கெனவே மெ?த்தம் 12,591 தபால் வாக்குகள் பதிவாகின.
முதல் முறை வாக்காளர்கள் 24,919 பேர் இருந்தனர். வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிகளில் வரிசையில் நிற்காமல் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காலை முதலே அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர்கள் வாக்களிக்க வந்தனர். நீண்ட வரிசையில் நின்று இளையோர் தொடங்கி முதியோர் வரை வாக்களித்தனர்.
பாகூரில் கூப்பன் விநியோக தகராறு, திருக்கனூரில் பாஜக- காங்கிரஸ் மோதலால் தடியடி போன்ற சிறு சிறு சம்பவங்கள் மட்டும் நிகழ்ந்தன.
இறுதி நிலவரப்படி புதுச்சேரியில் 89.83 சதவீத வாக்குகள் பதிவானது. இதுவரை நடந்த தேர்தல்களில் இதுவே உச்சமாகும். நாட்டிலேயே திரிபுராவில்தான் 88 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்து. அதையும் தாண்டி புதுச்சேரியில் பதிவாகியுள்ளது.

admin
