பிரதமர் மோடி -அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பு! அமெரிக்க பொருட்கள் மீதான வரிகளை குறைக்க பேச்சு வார்த்தை!
பிரதமர் மோடி அமெரிக்கஅதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பு! அமெரிக்க பொருட்கள் மீதான வரிகளை குறைக்க பேச்சு வார்த்தை!
ம.பா.கெஜராஜ்!
அமெரிக்க பொருட்கள் மீதான வரிகளை குறைக்க கோரியும் மேலும் பல்வேறு உலக விஷயங்கள் குறித்தும், டிரம்ப் பிரதமர் மோடியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
பிரான்ஸ் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அமெரிக்காவுக்கு சென்றார். தலைநகர் வாஷிங்டனில் உள்ள விமானப் படை தளத்தில் தரையிறங்கிய அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவரை இந்திய வம்சாவளியினர் திரண்டு வந்து அவரை உற்சாகமாக வரவேற்றனர்.
அங்கிருந்து அமெரிக்க அதிபர் மாளிகையில் உள்ள விருந்தினர் இல்லமான புகழ்பெற்ற பிளேர் ஹவுஸுக்கு பிரதமர் மோடி சென்றார்.
அமெரிக்க நேரப்படி வியாழக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு (இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணி ) அதிபர் டொனால்டு ட்ரம்பை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கி, கட்டியணைத்து ஒருவரை ஒருவர் நலம் விசாரித்து விட்டு, 45 நிமிடங்கள் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.
கடந்த ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக ட்ரம்ப் பதவியேற்றார். இதன்பிறகு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, ஜோர்டான் மன்னர் அப்துல்லா ஆகியோர் மட்டுமே அதிபர் ட்ரம்பை சந்தித்துப் பேசி உள்ளனர்.
இதில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் ஜோர்டான் மன்னர் அப்துல்லாவும் பாலஸ்தீன பிரச்சினை தொடர்பாக சந்தித்து பேசினர்.
ஜப்பான் பிரதமர் இஷிபா, சீனாவால் எழுந்துள்ள பாதுகாப்பு, வர்த்தக சவால்கள் குறித்து ட்ரம்புடன் ஆலோசனை நடத்தினார். இந்த சூழலில் அதிபர் ட்ரம்பை சந்தித்த 4-வது உலக தலைவர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.
இந்த சந்திப்பின்போது பாதுகாப்பு, வர்த்தகம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாம்.
கடந்த 2023-24-ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு 77.5 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன. இதே காலகட்டத்தில் அமெரிக்காவில் இருந்து 42.2 பில்லியன் டாலர் மதிப்பு பொருட்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த வர்த்தக பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அமெரிக்க பொருட்கள் மீதான வரிகளை குறைக்க வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தினார்.
சீன பொருட்கள் மீதான வரியை அதிபர் ட்ரம்ப் உயர்த்தி உள்ளார். இதன்காரணமாக அமெரிக்காவில் இந்திய பொருட்களின் விற்பனை கணிசமாக அதிகரிக்கும். அதேநேரம் இந்தியாவில் அமெரிக்க பொருட்களின் இறக்குமதியும் கணிசமாக அதிகரிக்கும்.
அமெரிக்க தொழிலதிபர் எலன் மஸ்க் தனது டெல்சா காரை இந்தியாவில் விற்பனை செய்ய நீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறார். இதை மத்திய அரசு சொகுசு காராக கருதி அதிக வரியை விதிக்க முடிவு செய்தது. ஆனால் டெல்சா காரை மின்சார வாகனமாக கருதி சலுகை அளிக்க வேண்டும் என்று எலன் மஸ்க் வலியுறுத்தி வருகிறார்.
பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்ப் சந்திப்பின்போது இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. பிரதமர் மோடி எலான் மாஸ்க்கையும் சந்தித்தார்.
சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகள் ஒன்றிணைந்து குவாட் அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டமைப்பை வலுப்படுத்த இரு தலைவர்களும் உறுதி மேற்கொண்டனர்.
இந்திய, பசிபிக் பிராந்திய கடல் பகுதியில் கூட்டாக ரோந்து பணியை மேற்கொள்வது குறித்து ட்ரம்பும், மோடியும் முக்கிய ஆலோசனை நடத்தினர். ராணுவ, வர்த்தகரீதியாக சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டன. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை திரும்ப அழைத்து கொள்வது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

admin
