₹11.48 கோடி கழிவுநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு! 300-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் – திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றக் கோரிக்கை

₹11.48 கோடி கழிவுநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு! 300-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் – திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றக் கோரிக்கை

செய்தி: கு. அசோக்,
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த பாண்டியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட உடையார்பாளையம் கிராமத்தில், நகராட்சி சார்பில் ₹11 கோடியே 48 லட்சம் மதிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சோளிங்கர்–அரக்கோணம் நெடுஞ்சாலை அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு பாண்டியநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் கல்யாணி ரகுராம் ராஜன் தலைமை வகித்தார்.

உடையார்பாளையம், நரசிம்மர்புறம், போடபாறை, பாண்டியநல்லூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் வழக்கறிஞர்கள் உதயகுமார், ரகுராம் ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால் நிலத்தடி நீர், குடிநீர் ஆதாரங்கள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

எனவே, திட்டம் தொடர்பாக சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு, சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் போராட்டங்களை நடத்தப் போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.