பாலியல் தொந்தரவு புகார் மீது நடவடிக்கை இல்லை! சொத்தையும் பிரித்துத் தரவில்லை – ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி பெண் தர்ணா!

பாலியல் தொந்தரவு புகார் மீது நடவடிக்கை இல்லை! சொத்தையும் பிரித்துத் தரவில்லை – ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி பெண் தர்ணா!

செய்தி: ஜி.குலசேகரன்,

திருப்பத்தூர்: தாய்மாமன் மற்றும் அவரது மகன் மீது அளித்த பாலியல் தொந்தரவு புகாரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனக்கு சேர வேண்டிய சொத்தைப் பிரித்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி, மாற்றுத்திறனாளி பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த மேல்புதூர் மண்டலநாயக்கன்குண்டா பகுதியைச் சேர்ந்தவர் அனுமுத்து. இவரது மனைவி சரசு. இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு ஆண் பிள்ளை உள்ளனர்.

இவர்களது மூத்த மகள் மாற்றுத்திறனாளியான இந்திரா. இவர் நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த சண்முகம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்திராவின் தந்தை அனுமுத்துவுக்கு 5 ஏக்கர் நிலமும், அவரது தாத்தாவுக்கு சொந்தமாக 75 சென்ட் நிலமும் இருப்பதாக கூறப்படும் நிலையில், தனக்கு சேர வேண்டிய சொத்தைப் பிரித்துத் தருமாறு இந்திரா தனது தாய், சகோதரிகள் மற்றும் சகோதரர் பாண்டியனிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், சொத்தைப் பிரித்துத் தர முடியாது என அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, நாட்றம்பள்ளி வெலக்கல்நத்தம் பகுதியைச் சேர்ந்த இந்திராவின் தாய்மாமன் ராஜா மற்றும் அவரது மகன் ரித்தீஷ் ஆகியோர், இந்திரா காதலித்து திருமணம் செய்து கொண்டதை விரும்பாமல், அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இந்திரா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இந்திரா குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இந்திரா, பாலியல் தொந்தரவு புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனக்கு உரிய சொத்தைப் பிரித்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.

சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.